தமிழ்நாட்டில் 78 சார் பதிவாளர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 36 மாவட்ட பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதே அதிகாரிகள் மத்தியில் திகைப்பை ஏற்படுத்திய நிலையில், இந்நிலையில் சென்னை மண்டலத்தில் மட்டும் 78 சார்பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து அரசுத்துறை செயலர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், நிர்வாகக் காரணங்களின் அடிப்படையில் சார் பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் உள்ள 78 சார்பதிவாளர்களையும் மாற்றம் செய்து அரசுத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளது அதிகாரிகள் மத்தியில் ஆட்டம் காணவைத்துள்ளது.
பின்னணி?
பொது மக்கள் தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அரசுத்துறை செயலர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டாலும் அண்மையில் சென்னை மற்றும் திருச்சியில் சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த சோதனையை அடுத்து தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிக பத்திரப்பதிவு நடக்கும் அலுவலகமாக செங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகம் மாறியுள்ளது. குறிப்பாக செங்குன்றம் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாறி வருவதால், செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தினமும் அதிகப்படியான பத்திரப்பதி நடைபெறுவதாகவும், அதில் பல பத்திரப்பதிவுகள் முறை கேடாக பதிவாவதாகும் வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதோபோல், திருச்சியில் உள்ள உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்திலும் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெறுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, நேற்று அதாவது ஜூலை 5ஆம் தேதி, செங்குன்றம் மற்றும் திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், செங்குன்றத்தில் ரூபாய் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், திருச்சி உறையூரில் ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ரூபாய் மூன்று ஆயிரம் கோடி மதிப்பிலான ஆவணங்களும் கணக்கில் காட்டமல் வைத்திருந்தாக ஊடகங்களில் செய்தி வெளியாகி அதிர்ச்சி அளித்தது.
குறிப்பாக செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. மொத்தம் 17 மணி நேரம் நடைபெற்ற தீவிர சோதனை இன்று அதாவது ஜூலை 6ஆம் தேதி காலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது. இந்த சோதனை காரணமாக செங்குன்றம் பகுதியில் நேற்று முதல் இன்று காலை வரை பரபரப்பு நிலவியது.
இதன் தொடர்ச்சியாகத்தான், 36 மாவட்டங்களில் உள்ள பதிவாளர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் உள்ள 78 சார் பதிவாளர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.