தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் - Tamil Nadu Women Entrepreneur Empowerment Scheme (TWEES)
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்களுக்கும் ரூ.10.00 இலட்சம் வரை வங்கிக் கடனுதவியும், 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2.00 இலட்சம் வரை) மானியமும் வழங்குவதோடு, உரிய பயிற்சியும் வழங்கப்படும்.
தொழில் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்கள் மற்றும் திருநங்கைகள் தகுதியானவர்கள் ஆவார்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், ஆதரவற்ற கைம்பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 55 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
என்னென்ன தொழில் தொடங்கலாம் ?
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் மட்கும் பொருட்கள் தயாரிப்பு, விவசாய உற்பத்தி கழிவுகளில் (தவிடு, வைக்கோல்) இருந்து பொருட்கள் தயாரித்தல், தென்னை நார் மூலம் தயாரிக்கப்படும் செடி வளர்க்கும் தொட்டிகள், காகித கழிவுகளிருந்து பென்சில் தயாரித்தல், ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிகலன்கள் தயாரிப்பு, கண்ணாடி ஓவியம், கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு, பட்டுநூல் அணிகலன் தயாரிப்பு, வீட்டில் தயார் செய்யும் உணவு பொருட்கள் விற்பனையகம், யோகா நிலையம், உடற்பயிற்சி நிலையம், சலவை நிலையங்கள், மணப்பெண் அலங்கார நிலையம், மெகந்தி மற்றும் டாட்டூ நிலையம், சத்து மாவு உருண்டைகள் தயாரிப்பு, சத்து மாவு சார்ந்த பேக்கரி உணவு பொருட்கள் தயாரிப்பு நிலையம், தானிய வகைகளில் தயார் செய்யும் ஐஸ்கிரிம், எலுமிச்சை எண்ணெய் தயாரிப்பு, வெட்டி வேர் எண்ணெய் தயாரிப்பு மற்றும் இதர தகுதியான தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
முக்கிய தகவல்கள் என்ன?
எனவே, இத்திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள பெண்கள் உரிய ஆவணங்களான புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், திட்ட அறிக்கை, வங்கி கணக்கு விவரம், விலைப்புள்ளி பட்டியலுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறும், கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் (044–29995351) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா அறிவித்துள்ளார்.