இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக விசேஷ நாட்கள் , விடுமுறை நாட்கள் என்றால் ரயில் டிக்கெட்டே கிடையாது என்ற அளவுக்கு முன்கூட்டியே டிக்கெட் முன் பதிவு செய்து விடுவார்கள்.
ரயில்களில் ஏசி பெட்டி, சாதாரண வகுப்புகள், இருக்கை மட்டுமே கொண்ட வகுப்புகள் என பல வகைகள் உள்ளன. இதில் ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு போர்வை ,ஒரு தலையணை மற்றும் இரண்டு படுக்கை விரிப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது . ஆனால் ஏசி அல்லாத ஸ்லீப்பர் வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு இவை வழங்கப்படுவது கிடையாது. தெற்கு ரயில்வே முன்னோடி திட்டமாக ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் இந்த வசதிகள் கிடைக்கும் வகையில் அட்டகாசமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏசி வசதி இல்லாத ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கும் படுக்கை விரிப்புகள் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. சென்னை ரயில்வே கோட்டத்தில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த படுக்கை விரிப்பு வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய ரயில்வே பொறுத்தவரை இது ஒரு முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது .
பயணிகள் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தங்களுக்கு படுக்கை விரிப்பு வசதி வேண்டுமென்றால் அதனை தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது ரயிலில் பயணம் செய்யும்போது உரிய கட்டணம் செலுத்தி படுக்கையை விரிப்புகளை பெற்றுக் கொள்ளலாம். படுக்கை விரிப்பு மற்றும் தலையணைக்கு 50 ரூபாய் கட்டணம், தலையணைக்கு மட்டும் 30 ரூபாய் கட்டணம், படுக்கை விரிப்பு மட்டும் வேண்டும் என்றால் 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் தெற்கு ரயில்வேவிற்கு ஆண்டுக்கு 28.27 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. முதல் கட்டமாக 10 ரயில்களில் இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்த ரயில்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ஒரு ஒப்பந்ததாரரை நியமனம் செய்து படுக்கை விரிப்புகளை கொள்முதல் செய்வது ,அவற்றை சுத்தம் செய்வது ,பேக்கிங் செய்வது ,ரயிலில் ஏற்றி வினியோகம் செய்வது ஆகிய அனைத்து பணிகளும் ஒப்படைக்கப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.