புதுச்சேரி: சூரிய ஒளி மின்திட்டத்திற்கான பை-டைரக் ஷனல் மீட்டரை இனி புதுச்சேரி அரசே இலவசமாக பொருத்தும் என அறிவித்துள்ளது.

Continues below advertisement

சூரிய ஒளி மின் திட்டம்

சூரிய ஒளி மின் திட்டத்திற்கான பை-டைரக் ஷனல் மீட்டரை இனி புதுச்சேரி அரசே இலவசமாக பொருத்தும் என அறிவித்துள்ளது. பிரதம மந்திரியின் இலவச வீட்டு சூரியமின் திட்டத்தின் கீழ், புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,684 வீடுகளில் சோலார் பேனல் பொருத்தியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 78 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதுவரை 12.5 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே சோலார் பேனல்கள் பொருத்தியவர்கள் பில்லிங்கான நெட் மீட்டர் கிடைக்கவில்லை என, கடந்த ஆண்டு முதலே புலம்பி வந்தனர். புதுச்சேரியில் தனிப்பட்ட வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில், ஏராளமான சோலார் பேனல் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, உரிமையாளர்கள் பயன்படுத்தியது போக உபரியை மின் வாரியத்திற்கு விற்கலாம்.

Continues below advertisement

பை-டைரக் ஷனல் மீட்டரை இனி புதுச்சேரி அரசே இலவசமாக பொருத்தும்

இதற்காக, சூரியசக்தி மின் நிலையம் அமைத்துள்ள இணைப்புகளில், பை-டைரக் ஷனல் என்ற நெட் மீட்டர் பொருத்தப்படுகிறது. அதில், சூரியசக்தி மின் உற்பத்தி, உரிமையாளர் பயன்படுத்தியது, மின் வாரியத்திற்கு வழங்கியது, மின் வாரியம் மின்சாரத்தை பயன்படுத்தியது உள்ளிட்ட விபரங்கள் பதிவாகும். இந்த நெட் மீட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சூரிய ஒளி மின்திட்டத்திற்கான பை-டைரக் ஷனல் மீட்டரை இனி புதுச்சேரி அரசே இலவசமாக பொருத்தும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் கூறுகையில், ”இதுவரை பை-டைரக் ஷனல் மீட்டர் எனப்படும் சோலார் மீட்டரை நுகர்வோரே பொருந்தி வந்தனர். தற்போது தேவையான பை-டைரக் ஷனல் மீட்டர் மின் துறையால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே இனி பிரதமர் மந்திரியின் இலவச சூரியஒளி மின் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் இலவசமாக மின் துறை சார்பில் பொருத்தப்படும்.

சூரிய ஒளி மின் திட்டத்தில் இணைவதன் மூலம் 150 யூனிட் முதல் 450 யூனிட் வரை மின்சாரத்தை பொதுமக்கள் சேமிக்கலாம். ஆண்டின் இறுதியில் மார்ச் 31ம் தேதி வரை சோலார் மின்சாரத்தை பயன்படுத்தியது போக மின் துறைக்கு வழங்கிய உபரி மின்சாரம் சராசரி மின் கொள்முதல் தொகையாக ஒரு யூனிட்டிற்கு 5.77 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்” என்றார்.

மும்முனை பை-டைரக் ஷனல் மீட்டரை 8,500 ரூபாய் கொடுத்தும் சிங்கிள் பேஸ் பை-டைரக் ஷனல் மீட்டரை 2,500 ரூபாய் வரை கொடுத்து சூரியஒளி மின் திட்டத்தில் இணைந்த நுகர்வோர் வாங்கி தர வேண்டும். இனி இந்த செலவு குறையும்.

பதிவு செய்வது எப்படி?

இலவச மின்சார திட்டத்தின்கீழ் மானியம் பெற்று தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல் பொருத்த விரும்புவோர் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாநிலம், மாவட்டத்தை தேர்வு செய்து, மின் நுகர்வு எண், மொபைல் எண், இ மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் வீடுகளில் சோலார் பேனல் பொருத்தப்படும்.

மானிய விவரங்கள்

குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோவாட் முதல் 2 கிலோ வாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ. 30,000 மானியம் வழங்கப்படும். கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதம், 3 கிலோவாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்படும். 3 கிலோ வாட் திறனுக்கு அதிகமான அளவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு உச்சவரம்பாக ரூ.78,000 மானியம் வழங்கப்படும்.

வீட்டிற்கு எவ்வளவு மானியம் யூனிட் மாத மின் நுகர்வு சராசரியாக 150 யூனிட் வரை இருந்தால், 1 முதல் 2 கிலோவாட் திறனுள்ள சூரிய சோலார் பேனல்கள் பொருத்தி ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை மானிய உதவி பெறலாம். மின் நுகர்வு மாதத்துக்கு சராசரியாக 150 யூனிட் முதல் 300 யூனிட் வரை இருந்தால் 2 கிலோவாட் முதல் 3 கிலோவாட் திறனுள்ள சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தி ரூ.60,000 முதல் ரூ.78,000 வரை மானியம் பெறலாம். மாத சராசரி மின் நுகர்வு 300 யூனிட்டுக்குமேல் உள்ளவர்கள் 3 கிலோவாட் திறனுக்கு அதிக அளவிலான சோலார் பேனல்களை பொருத்தினாலும் மானிய உச்ச வரம்பு ரூ.78,000 ஆகும்.