இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

திருநெல்வேலி–மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவை, பயணிகளின் கோரிக்கையை முன்னிட்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருநெல்வேலியில் இருந்து இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு, அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் வழியாக பயணம் செய்து, மறுநாள் காலை 7:30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், இந்த ரயில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு, அதே வழித்தடத்தில் பயணம் செய்து மறுநாள் காலை 8:05 மணிக்கு திருநெல்வேலி வந்து சேர்கிறது. கோடை விடுமுறை காலத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு இந்த சேவை பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இதனால், பொதுமக்களிடையே இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பயணிகளின் அதிக தேவையை கருத்தில் கொண்டு, இந்த சிறப்பு ரயில் சேவை ஜூன் 28 வரை இயக்கப்படுவதுடன், மறுமார்க்க சேவை ஜூன் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.