Gold Rate: ஒரு கிலோ தங்கத்தின் விலை 1 கோடி ரூபாய்.. கொரோனாவிற்கு பிறகு உச்சமோ உச்சம்!
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூபாய் 83 லட்சம் வரை இந்தியாவில் உயர்ந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை தங்கத்திற்கு என்று தனி மதிப்பு உண்டு. பொருளாதார ரீதியாக அத்தியாவசமான ஒன்றாக தங்கம் மாறியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூபாய் 94 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.
இந்த சூழலில், கடந்த 35 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எந்தளவு மாறியுள்ளது என்பதை கீழே விரிவாக காணலாம். அதாவது ஒரு கிலோ தங்கத்தின் விலை கடந்த 35 ஆண்டுகளில் அடைந்துள்ள உச்சத்தை கீழே காணலாம்.
1990ம் ஆண்டு:
தொழில் வளர்ச்சி, இணைய வளர்ச்சி தொடங்கிய காலகட்டமான 1990களில் வளர்ச்சிக்கு நிகராக வேலையில்லா திண்டாட்டமும் இருந்தது. அப்போது ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூபாய் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இன்று அந்த விலையில் மாருதி 800 கார் வாங்க இயலும்.
2000ம் ஆண்டு:
இணைய வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்தியா அடுத்தகட்டத்திற்குச் சென்ற 2000ம் ஆண்டில் ஒரு கிலோ தங்கம் தமிழ்நாட்டில் ரூபாய் 4 லட்சத்து 40 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இன்று அந்த விலைக்கு ரூபாய் எஸ்டீம் கார் வாங்க இயலும்.

2005ம் ஆண்டு:
2005ம் ஆண்டு பொருளாதார, வேலைவாய்ப்பில் இந்தியா முன்னேறத் தொடங்கிய காலம். அப்போது ஒரு கிலோ தங்கம் விலை ரூபாய் 7 லட்சத்திற்கு உயர்ந்தது. அந்த விலையில் தற்போது இன்னவோ கார் வாங்க இயலும்.
2010ம் ஆண்டு:
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, பல துறைகளில் வளர்ச்சி காரணமாக மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தது. 2005 முதல் 2010ம் ஆண்டு காலகட்டத்தில் தங்கத்தின் விற்பனை அதிகரித்ததால் இந்தியாவில் தங்கத்தின் விலை ஏறத்தொடங்கியது. அதாவது, ஒரு கிலோ தங்கத்தின் விலை 2010ம் ஆண்டு ரூபாய் 18 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. அதாவது, 2005 முதல் 10 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 11 லட்சம் தங்கம் விலை ஏறியுள்ளது. இன்று அந்த விலையில் ஃபார்ச்சுனர் கார் வாங்கலாம்.
2019ம் ஆண்டு:

2019ம் ஆண்டு தங்கத்தின் விலை கிலோவிற்கு ரூபாய் 35 லட்சத்து 22 ஆயிரம் ஆகும். இந்த விலையில் இன்று பிஎம்டபுள்யூ கார் வாங்கலாம். அதாவது, 2010 முதல் 2019 ஆண்டுக்குள் அதாவது இடைப்பட்ட 9 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 17 லட்சம் உயர்ந்துள்ளது.
2025ம் ஆண்டு:
நாட்டில் தற்போது தங்கத்தின் விலை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் உள்ளது. அதாவது, இன்றைய தினத்தில் ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூபாய் 1 கோடியே 18 லட்சத்து 25 ஆயிரமாக உள்ளது. இந்த விலைக்கு லேண்ட் ரோவர் கார் வாங்கலாம். கொரோனாவிற்கு பிறகு தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
சீரற்ற பொருளாதாரம், நிலையான முதலீடுகள் இல்லாதது என சில காரணங்களால் தங்கத்தின் மீது சாமானிய மக்கள் மட்டுமின்றி பெரும் முதலீட்டாளர்களும் முதலீடு செய்வதால் கடந்த 6 ஆண்டுகளில் தங்கம் கிலோவிற்கு 83 லட்சம் உயர்ந்துள்ளது. தங்கம் என்பது உலகிலேயே அதிகளவு வாங்கப்படும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியர்கள் தங்கத்தை நகையாக மட்டுமின்றி அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைக்கான கடன் வாங்கும் பொருளாக இருப்பதால் அதன் தேவை அதிகளவு உள்ளது. குறிப்பாக, நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினருக்கு ஆபத்து காலத்தில் தங்கமே பிரதான ஆபத்பாந்தவனாக உள்ளார்.





















