தமிழ்நாட்டையே பரபரப்பாக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததற்காக சுவாதி மீது சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.


வழக்கு:


கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 10 பேரும் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதைப்போல வழக்கில் ஐந்து பேர் விடுதலை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இவ்வழக்கில், சுவாதி  நவம்பர் 25ஆம் தேதி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகினார். அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பப்பட்டது. சத்தியபிரமாணம் செய்த பின், சுவாதி பதிலளித்தார்.


விசாரணையைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அவரிடம் விசாரணை செய்ததில், சுவாதி தொடர்ச்சியாக உண்மையைச் சொல்லவில்லை. மறுத்துவிட்டார். அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சியை காண்பித்தும், அதில் தெரியும் பெண் தான் இல்லை என தெரிவித்துவிட்டார். அந்த காட்சியில் தெரியும் பெண் அவராக இருந்தும், அதனை ஏற்காமல் தொடர்ச்சியாக மறுத்துவிட்டார். அவரையே அடையாளம் தெரியவில்லை என கூறிவிட்டார். சுவாதி வேறு யாராலும் அழுத்தத்திற்கு ஆளாகி, யாரையும் காப்பாற்ற இவ்வாறு கூறுகிறார்களோ? என நினைக்கத் தோன்றுகிறது.


சத்தியபிரமாணம் எடுத்த பின்னர் நீதிமன்றத்தில்  தவறான தகவலை அளித்தால் அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என அவரிடம் தெளிவாக குறிப்பிட்டே, வழக்கு  ஒத்திவைக்கப்பட்டது.


இந்த வழக்கை பொறுத்தவரை, சாட்சி சுவாதி, நீதித்துறை நடுவர் முன்பாக கூறிய வாக்குமூலத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட தகவலைக் கூறுகிறார். அவர் கல்வியறிவு அற்றவர் அல்ல.  அவர் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என நன்கு தெரிந்தும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். அவரது சாட்சியம் இந்த வழக்கில் மிக முக்கியமானது. அவரை சந்தித்ததன் காரணமாகவே கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். கீழமை நீதிமன்ற விசாரணையின் போது அதற்கான சாட்சிகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என நீதிபதி தெரிவித்தார்.


நீதித்துறை நடுவர் முன்பு அளித்த தகவல் உண்மையில்லை என்றால் அவர் அவரிடம் தவறான தகவலை அளித்ததாக கருதப்படும். விசாரணை நீதிமன்றத்தில் அவர் சொன்ன தகவல் உண்மையில்லை என்றால் அங்கும் அவர் தவறான தகவல் அளித்ததாகக் கருதப்படும். அவருக்கு மறு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நீதிமன்றம் வாய்ப்பளித்தும், உண்மையை தெரிவிக்கவில்லை. இந்த நீதிமன்றம் கண்டும் காணாமல் இதனை கடந்து செல்ல இயலாது. ஆகவே மேற்கொண்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவருகிறது. ஆகவே, சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது என நீதிமன்றம் தெரிவித்தது.


இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததற்காக சுவாதி மீது சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.