"இன்ஸ்டாகிராமில் குறுஞ் செய்தி"
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சுந்தராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவரது மகன் கோகுல்ராஜ் ( வயது 34 ) இவர் டெம்போ ஓட்டுநராக பணிபுரிந்து வாழ்கை நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் அதே பகுதியிலுள்ள உத்தர விநாயகர் கோயில் வீதி கள்ளுக்கடை அருகில் வசிக்கும் தேவராஜ் ( வயது 30 ) என்பவரது மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
தினமும் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்த நிலையில் இது குறித்து இளம்பெண் அவரது கணவர் தேவராஜிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு கோபமடைந்த அவர் உடனடியாக கோகுல்ராஜை நேரில் சந்தித்து தனது மனைவிக்கு இன்ஸ்டாவில் மெசேஜ் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
"4 பேர் கைது"
கோகுல்ராஜ் தொடர்ந்து குறுஞ் செய்திகளை அனுப்பித் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், தனது நண்பர்களான நந்தகுமார் ( வயது 19 ) , பிரசாந்த் ( வயது 23 ) மற்றும் தரனேஷ் ( வயது 23 ) ஆகியோருடன் சேர்ந்து கோகுல்ராஜைத் தாக்கியதாகத் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் கோகுல்ராஜ் படுகாயமடைந்தார். இதையடுத்து , அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு முதலுதவி பெற்ற அவர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கோகுல்ராஜின் தந்தை சிவராஜ் , அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் , தேவராஜ் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
