தமிழ்நாட்டின் முதல் '15-நிமிட சர்வதேச நகரம்'.. 2000 ஏக்கரில் அரசு போடப்போகும் மெகா பிளான்!
Madurantakam Global City: "செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2000 ஏக்கரில் பிரம்மாண்ட சர்வதேச நகரம், நில எடுப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது."

தமிழகத்தின் முக்கிய நகரங்களை வழக்கமான முறையில் விரிவாக்கம் செய்வதை விட, மக்களின் அனைத்துத் தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் அதிநவீன ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக, சென்னைக்கு அருகே செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ‘சர்வதேச நகரம்’ (Global City) அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான நில எடுப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
டிட்கோ (TIDCO) மூலம் மாஸ்டர் பிளான்
இத்திட்டத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) முழுமையாகக் கையில் எடுத்துச் செயல்படுத்தி வருகிறது. இந்த சர்வதேச நகரத்திற்கான முழுமையான திட்ட அறிக்கை (Master Plan) தயாரிக்கும் பணிகளில் சர்வதேச அளவிலான தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அமையவுள்ள இந்த சர்வதேச நகரம், உலகின் மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் 15 நிமிட நகரக் கோட்பாட்டின் (15-Minute City Concept) அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளது. அதாவது, மக்கள் தங்களின் குடியிருப்புக்கு மிக அருகிலேயே வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் போன்ற அனைத்துத் தேவைகளையும் எளிதில் பெறும் வகையில் இது வடிவமைக்கப்படும்.
மதுராந்தகத்தில் நவீன நகரம்
இத்திட்டத்தில் சர்வதேசத் தரத்திலான நவீன குடியிருப்பு வளாகங்கள், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிநவீன மருத்துவமனைகள் அமையவுள்ளன. மேலும், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் (IT Parks), செயற்கை நுண்ணறிவு (AI), பின்டெக் (FinTech) மற்றும் நிதி சார்ந்த வணிக வளாகங்கள் உள்ளடங்கிய தொழில்நுட்ப மண்டலங்களும் இதில் உருவாக்கப்படும். இவற்றுடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவுநீர் மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பசுமைப் பகுதிகள் போன்ற கட்டமைப்பு வசதிகளும் இடம்பெறவுள்ளன.
நில எடுப்பு நடைபெறும் கிராமங்கள்
சர்வதேச நகரத் திட்டத்திற்காக மதுராந்தகம் தாலுகாவில் உள்ள முக்கிய கிராமங்களில் இருந்து 1,945 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அத்திமனம், ஜானகிபுரம், கள்ளன்பிரான்புரம், படையம் அல்லது படாளம், பாளையனூர் மற்றும் புலிப்பாரக்கோவில் ஆகிய கிராமங்களில் வருவாய்த் துறை வாயிலாக நில எடுப்பு செய்வதற்கான பணிகளைத் தொழில் துறை அதிகாரிகள் மிக விரைவில் தொடங்க உள்ளனர்.
மதுராந்தகம் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
சென்னை ஓஎம்ஆர் மற்றும் மேற்குப் பகுதிகள் ஏற்கனவே அதிக நெரிசலைச் சந்தித்து வரும் நிலையில், சென்னைக்கு தெற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மதுராந்தகம் பகுதி, சமதள அமைப்பைக் கொண்டிருப்பதாலும், போக்குவரத்து இணைப்புகளுக்கு உகந்ததாக இருப்பதாலும் இத்திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்வதேச நகரத் திட்டம் முழுமையடையும் போது, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் மிகப்பெரிய தொழில் மற்றும் பொருளாதார மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















