முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தோல்வியை தழுவிய நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில் முதலமைச்சர் விஜய், உடனடியாக 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களை பாதுகாப்பிற்கு சிங்கப்பெண் படை, போதை பொருட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை என உத்தரவுகளை வெளியிட்டார். இந்த நிலையில் விவசாயிகளுக்கான கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Continues below advertisement

கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தேர்தலுக்கு முன்பாக அறிவித்த வாக்குறுதி படி விவசாயிகள் நலன் காக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, கூட்டுறவு வேளாண் சங்கங்கள் மூலம் தொடங்கப்படும் கடன் வசூல் நடவடிக்கைகளை உடனடியாகத் தள்ளுபடி அறிவிப்பு வரும் வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. அரசாங்கம் கடன் தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடும் போது, பயனாளிகளின் தகுதிகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்படும் வரை கடன் வசூல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவது வழக்கம்.

அதாவது விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற வட்டியில்லா கடனை திரும்ப செலுத்துவதற்கான தேதி முடிவடையும் நிலையில் உள்ளது. கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில் காலம் கடந்து கடனை திருப்பிச் செலுத்த 13 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். மேலும் சாகுபடி செய்வதற்கு கடன் பெற முடியாத நிலையும் ஏற்படும். பொருளாதார சிரமத்தில் இருக்கின்ற விவசாயிகளுக்கு தமிழக அரசு உதவிக்கரமாக செயல்பட வேண்டும்.

Continues below advertisement

நிபந்தனையின்றி தள்ளுபடி செய்திடுக

இந்நிலையில் தமிழக அரசு பயிர்க் கடன்களை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழக அரசு சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன், கூட்டுறவுக் கடன்களை எந்த வித நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். எனவே தமிழக அரசு விவசாய சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று செயல்பட வேண்டும்.மேலும் தமிழக அரசு உடனடியாக வேளாண் கூட்டுறவு கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்தி வைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக ஜி.கே.வாசன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.