"நீட் என்னும் தேர்வு தமிழ்நாட்டில் நடத்தப்படுவது செல்லாது என்பது என்னுடைய எண்ணம். 2007-ஆம் ஆண்டு நுழைவு தேர்வை ரத்துசெய்ய ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது, அந்த சட்டம் இன்றும் நிலுவையில் உள்ளது, நுணுக்கமாக அந்த சட்டத்தை ஆராய்ந்து, உச்சநீதிமன்றத்தில் வாதிட்டால் நிச்சயம் நீட் தேர்வுக்கு விலக்குபெற முடியும்" என கருணாநிதியின் நினைவஞ்சலி கூட்டத்தில் ஒருவர் பேசினார். யார் அவர்?


ஏ.கே ராஜன் யார்?


நீட் தேர்வுக்கு பதிலாக அனைத்து மாணவர்களும் பயன்பெறும் மாற்று வழிகளை ஆராய உயர்நிலை குழு அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த நீட் ஆராய்ச்சி குழுவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அப்பாய்ண்ட் செய்துள்ள நபர்தான், நீட் தேர்வுக்கு விலக்குபெற முடியும் என்று அன்றே உறுதியளித்த ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஏகே ராஜன்.



தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்ப்பட்டி கிராமத்தில் பிறந்து இயற்பியல் துறையிலும், சட்டத் துறையிலும் கல்வி பயின்று, தமிழ்நாட்டில் இன்று நாம் பின்பற்றும் பல்வேறு சட்டங்களை உருவாக்கி தந்தவர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த ஏ.கே ராஜனை 1996-ஆம் ஆண்டு அழைத்த கருணாநிதி தமிழ்நாட்டின் சட்டத்துறை செயலாளராக நியமித்தார்.



  • ஏகே ராஜன் சட்டத்துறை செயலாளராக பொறுப்பேற்றவுடன் இயற்றிய முதல் சட்டம்தான் மெட்ராஸ் என நாம் அழைத்து வந்த பெயரை சென்னை என மாற்றியது.

  • சீட்டு கம்பெனி நடத்திவிட்டு, பணத்தை ஏமாற்றி எடுத்து செல்லும் நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் மீண்டும் தங்கள் பணத்தை மீட்க TNPID என்ற சட்டத்தை வரைந்தார், மிக பெரிய இடங்களில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. ஆனால் அது அனைத்தையும் கடந்து இயற்றப்பட்ட சட்டம் மூலம் 3000 கோடி ரூபாய் பணம் மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார் ஏகே ராஜன்.

  • வருங்கால செல்வங்களான மாணவர்களின் நலன் கருதி anti prohibition of ragging act மற்றும் eve teasing act என்னும் சட்டத்தை வரைந்தவர் ஏகே ராஜன்.


இப்படி சட்டத்துறை செயலாளராக தான் பொறுப்பேற்றிருந்த (1996-1999) காலத்தில் பல முக்கிய சட்டங்களை தமிழகத்திற்கு வகுத்தார் ஏகே ராஜன். பின்னர் சேலம் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி 2005-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.


நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும், சமூகநீதியின் மீது கல் எறியப்படும் போதெல்லாம் ஏகே ராஜனின் சட்ட ரீதியிலான பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்காக 2006-ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட ஆணையை செயல்படுத்துவதற்காக ஒரு உயர்நிலை குழு அமைக்கப்பட்டது, அந்த குழுவின் தலைவராக செயல்பட்டவர் நீதியரசர் ஏ.கே.ராஜன். மேலும் ஒளிவு மறைவில்லா ஊழலற்ற நிர்வாகத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்த ஏகே ராஜன் தலைமையில் நிர்வாக சீர்திருத்த குழு 2007-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. மேலும் கடந்தாண்டு வேளாண் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்த போது "விவசாயச் சட்டம் 2020" என்ற புத்தகத்தை எழுதினார் நீதியரசர் ஏகே ராஜன், அதை படித்த சிலர் "கூட்டாட்சி தத்துவத்தை இந்த சட்டம் எவ்வாறு நொறுக்கும்" என்பதை ஏகே ராஜனின் புத்தகம் வெளிக்கொண்டு வந்துள்ளதாக கருத்து தெரிவித்திருந்தனர். 


ஒரு நீதிபதியாக, வழக்கறிஞராக, சட்ட செயலாளராக பல பரிமாணங்களில் பரந்துபட்ட அனுபவம் உடையவர் ஏகே ராஜன். இவருக்கு சட்டமும் தெரியும், நிர்வாகமும் தெரியும், மக்களின் தேவை என்னவென்பதும் தெரியும். இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அடுத்த அசைன்மெண்ட் தான் நீட்! காத்திருப்போம்.