நகமும் சதையுமாக, உடன் பிறவா சகோதரிகளாக இருந்த கனிமொழியும் கீதா ஜீவனும் இப்போது எதிர் எதிர் துருவங்களாக பிரிந்து நிற்கின்றனர். அவர்கள் இருவரிடையே மூண்ட அதிகார போர், சித்தரஞ்சன் சாலை வாசல் வரை பஞ்சாயத்திற்கு வந்திருக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட திமுகவை பொறுத்தவரை மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி தான் எல்லாமே என்ற நிலை ஒருகாலத்தில் இருந்தது. கீதாஜீவனின் தந்தை பெரியசாமியை தனது முரட்டு பக்தன் என்று கலைஞர் அழைப்பது உண்டு. அவரது இன்சியலான என்.பெரியசாமியை குறிப்பிடும் போது அவர் ’என்பெரியசாமி’ என்பார் கலைஞர். தனது தந்தையான பெரியசாமியை போன்றே தானும் கோலோச்சவேண்டும் என்று நினைத்த கீதா ஜீவனுக்கு தூத்துக்குடி எம்.பியும், கலைஞர் கருணாநிதியும் மகளுமான கனிமொழி இடைஞ்சலாக இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை என கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி., வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, தேர்தல் பணிகளில் கீதா ஜீவன், சரிவர ஈடுபடவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டை பெரிதாக கண்கொடுள்ளாத கனிமொழி, எம்.பியானது அனைத்தையும் மறந்து, கீதாஜீவனுடன் இணைந்து செயல்பட்டார் என்கிறார்கள். தூத்துக்குடிக்கு சென்றால், அமைச்சர் கீதா ஜீவனுடனே எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை வாடிக்கையாக கனிமொழி வைத்திருப்பதாக சொல்லும் உடன்பிறப்புகள், தேவேந்திரகுல வேளாளர் தொடர்பாக கீதா ஜீவன் பேசும் சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியானபோதும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கீதா ஜீவன் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தபோதும், உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவோடு மறைமுகமாக கூட்டணி வைத்துக்கொண்டிர்டுக்கிறார் என்ற புகார் வந்தபோதும் அவருக்கு ஆதரவாக நின்றவர் கனிமொழிதான் என்கிறார்கள்.
இப்படி பல்வேறு பிரச்னைகளில் இருந்து தன்னை காத்த கனிமொழி மீதே அடுக்கடுக்கான புகார்களை முதல்வரின் மருகன் சபரீசனிடம் வாசித்திருக்கிறார் கீதா ஜீவன் என்ற தகவல்தான் இப்போது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீயாக பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது.
‘கட்சி பணிகள் மட்டுமில்லாம, அரசு பணிகள், நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் கனிமொழி மூக்கை நுழைக்கிறார். என்னால் சுதந்திரமாக செயல்படவே முடியவில்லை. மாவட்டத்தில் ஒரு.எம்.பிக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அமைச்சரான எனக்கு இல்லை, கலெக்டர், எஸ்.பியில் தொடங்கி கடை நிலை ஊழியர்கள் வரை அவரைதான் அமைச்சர் போல பார்க்கிறார், எனக்கு உரிய கவுரம் கிடைப்பதே இல்லை’ என உதயநிதி ஸ்டாலினிடமும் கீதா ஜீவன் புலம்பி தள்ளியிருப்பதாக சொல்கிறார்கள்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வடகிழக்கு பருவமழையின் போது மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளான ஆதிபராசக்தி நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், கதிர்வேல் நகர், ராஜிவ் நகர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற இயலாத சூழல் இருந்தது. இது மாநகராட்சி பகுதி என்றாலும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குள் இப்பகுதிகள் வருகிறது. இந்நிலையில் இப்பகுதி மக்கள் மழை நீரை அகற்றுவது தொடர்பாக ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏக்கு தெரிவித்தனர். ஆனாலும் மழை நீர் அகற்றப்படுவதில் தாமதம் ஏற்படுவது தொடர்ந்தது.
தூத்துக்குடிக்கு ஆய்வுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினிடம் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா, தான் பலமுறை சொல்லியும் தண்ணீர் அகற்றப்படாமலும் ஒட்டபிடாரம் பகுதி கவனிக்கப்படாமலும் இருப்பதற்கு காரணம் அமைச்சர் கீதா ஜீவன் – தான் என போட்டுடைத்தார். இதனால், கண் சிவந்த முதல்வர் ஸ்டாலின், கீதா ஜீவனை அழைத்து கடுமையாக டோஸ் கொடுத்ததாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஆனால், முரட்டு பக்தரின் மகளான கீதா ஜீவனோ, தூத்துக்குடி முழுவதுமே கனிமொழி கட்டுப்பாட்டில் இருப்பதால், தான் அமைச்சராக இருந்தாலும் தன்னால் முழுமையாக செயல்படாத நிலை இருப்பதாக, அவர் மீது விழுந்த புகாரை கனிமொழி மீது மடை மாற்றி முதல்வரின் மருகன் சபரீசன் மூலமாக தட்டிவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் மழை நீரை அகற்றுவது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தின் போது முதல்வரே கீதாஜீவன் லைனுக்கு வர, என்ன நடந்துதோ தெரியவில்லை, கீதா ஜீவன் பம்பரமாக சுழல துவங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தாலும் இருவரும் கனிமொழி எம்.பி வந்து விட்டால் அவருடன் சேர்ந்து சுற்றி சுற்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். ஆனாலும் கனிமொழி எம்.பியின் முழுக்கவனமும் இங்கு இருப்பதால் அவர்களால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.
இது இப்படி என்றால் லோக்கல் திமுகவின் முன்னாள் கவுன்சிலர்களோ புலம்புகின்றனர். ’அக்கா கீதாஜீவன் முன்பு மாதிரி இல்லை தனக்கென வட்டத்தை அமைத்து உள்ளதால் அந்த வட்டத்தை தாண்ட முடியலைன்னு’ என்ற விதத்திலான புலம்பலும் கேட்க முடிகிறது.
இதுநாள் வரை கனிமொழியின் ஆதரவாளர்போல இருந்துவிட்டு, அவர் மீதே புகார் வாசித்துள்ள கீதா ஜீவன் குறித்து கனிமொழிக்கு முதல்வர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கனிமொழி சீரியசாக எடுத்துக்கொண்டு, கீதா ஜீவனிடமே ‘என்ன பத்தி தலைமைகிட்ட புகார் சொன்னீங்களாமே’ என நேரடியாகவே கேட்டிருக்கிறார். இதனால், தன்னுடைய பதவிக்கு ஏதும் ஆபத்து வருமோ என ஜீதா ஜீவன் வியர்த்துப்போயிருக்கிறார் என்கிறார்கள் தூத்துக்குடி உபிக்கள்.
இது குறித்து அமைச்சர் கீதா ஜீவனிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டபோது, அவரின் உதவியாளர் ஆல்பர்ட் தொலைபேசியை எடுத்து, ’அப்படி எந்த புகாரையும் கனிமொழி மேடம் மீது அமைச்சர் கீதா ஜீவன் சொல்லவில்லை. இப்போது கூட எம்.பி.கனிமொழியோடுதான் கீதா ஜீவன் ஒரு நிகழ்ச்சியில் இருக்கிறார்’ என்று சொல்லிவிட்டு நமது இணைப்பை துண்டித்துவிட்டார்.
முத்தமிழ் அறிஞரின் வாரிசுக்கும் முரட்டு பக்தரின் வாரிசுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் இந்த மோதலை முதல்வர் ஸ்டாலின் விரைந்து தீர்க்க வேண்டும் என்பதுதான் தூத்துக்குடி திமுகவினர் எதிர்பார்ப்பு.