செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள சசிகலாவிற்கு தொடர்புடைய 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கி நேற்று சீல் வைத்துள்ளது.


இந்நிலையில், தன்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட அந்த பையனூர் பங்களாவை  சசிகலா தரப்பிடமிருந்து தனக்கே மீட்டு கொடுக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும் பிரபல பாடலாசிரியருமான கங்கை அமரன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


இது தொடர்பாக ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு பேசிய அவர், எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட பையனூர் பங்களாவை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துவலியுறுத்த உள்ளதாகவும், அதன் பிறகே இந்த பங்களா குறித்தும், சசிகலா தரப்பு எப்படி தன்னிடமிருந்து பங்களாவை கைப்பற்றினார்கள் என்பது பற்றியும் விரிவாக பேட்டி அளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.



பையனூர் பங்களா உட்புறம்


தற்போது வருமான வரித்துறை 49 ஏக்கரில் உள்ள பையனூர் பங்களாவை முடக்கி சீல் வைத்துள்ள நிலையில், அந்த பங்களா தன்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை முதலமைச்சரிடம் அளித்து, அந்த இடத்தை திரும்ப பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் கங்கை அமரன்.




நேற்று பையனூர் பங்களாவை பூட்டி சீல் வைத்த வருமான வரித்துறை, அதற்கான காரணத்தை விவரிக்கும் வகையில் பத்து பக்கங்கள் உடைய நோட்டீசையும் பங்களா முகப்பில் ஒட்டியுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் இந்த சொத்தின் மூலம் ஆதாயம் பெறவோ, பிறருக்கு மாற்றவோ கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பங்களா முடக்கப்பட்டது குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகிய இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


கடந்த 2017ஆம் ஆண்டில் சசிகலா வீடு மற்றும் அவரது உறவினர்களுக்கு தொடர்புடைய 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த ரெய்டில் சசிகலா தரப்பு 60க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்களை தொடங்கி 1,500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சொத்துக்கள் முடக்கப்பட்டு வந்தன. 2019 ஆம் ஆண்டும் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும், 2020ல் ஐதரபாத்தில் ஸ்ரீ ஹரிசந்தனா எஸ்டேட் என்ற பெயரில் இயங்கிய நிறுவனத்திற்கு சொந்தமான 65 சொத்துகளும் பினாமி தடுப்பு சட்டத்தின்படி வருமான வரித்துறையால் கையகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது