பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடர்புடைய 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அந்த நிறுவனம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு ஜி ஸ்கொயர் விளக்கமளித்துள்ளது. 


தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. இதில்  சென்னை, கோவை, ஓசூர், திருச்சி, பெங்களூர், மைசூர், பெல்லாரி ஆகிய இடங்களில் உள்ள வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. அதேபோல் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக், ஜி ஸ்கொயர் நிர்வாகி பாலா, முதலமைச்சர் மருமகன் சபரீசனின் உறவினர் பிரவீன் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 


அண்ணாமலை சொன்னது என்ன? 


கடந்தாண்டு ஜூன் மாதம் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ எங்கே பார்த்தாலும் தமிழ்நாட்டில் அதிகம் காணப்படுவது ஜி ஸ்கொயர் நிறுவனம். இந்த நிறுவனத்தின் முன்னேற்ற கழகமாக சென்னையிலுள்ள சிஎம்டிஏ  மாறியுள்ளது. இதனைத் தவிர தமிழ்நாடு முழுவதுமிருந்து வரக்கூடிய நிலம் அனுமதிக்கு டிடிசிபி ஆகிய இரு அமைப்புகள் உள்ளது. சாதாரணமாக ஒருவர் நில அங்கீகாரம் பெறுவதற்கு கிட்டதட்ட 200 நாட்கள் ஆகும். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவையில் 122 ஏக்கருக்கு நில அங்கீகாரத்துக்கு 6 நாட்களில் அனுமதி கிடைத்தது. இப்படி சில இடங்களில் குறைவான நாட்களிலேயே ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிஎம்டிஏ அனுமதிக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் அரசாணை வெளியிட்டது. எப்போதெல்லாம் ஜிஸ்கொயர் நிறுவனம் விண்ணப்பிக்கிறார்களோ அப்போது மட்டுமே ஆன்லைன் லிங்க் வெளியாகும். அடுத்த ஒரு மணி நேரத்தில் லிங்க் முடிவடைந்து விடும். இந்த சிஎம்டிஏ, டிடிசிபி உள்ளிட்ட துறைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களுக்கு பொறுப்பு கொடுத்துள்ளார்கள். சிஎம்டிஏவில் சிஇஓ பதவி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 


எல்லோருமே ஜிஸ்கொயர் பற்றி பேசுவதால், அவர்கள் 6 நிறுவனங்களை புதிதாக தொடங்கியுள்ளனர். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் இயக்குநர்களாக உள்ளனர். ஒரே நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுவது தொடர்பாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை  அமைச்சர் முத்துசாமி பதில் சொல்ல வேண்டும்” என தெரிவித்திருந்தார். 


அமைச்சர் முத்துசாமி விளக்கம் 


ஜி ஸ்கொயர் தொடர்பான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு குறுகியகாலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும், எல்லா நிறுவனங்களுக்கும் விதிகளின்படி அனுமதி வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.


”அண்ணாமலை உரிய ஆதாரங்களுடன் பேச வேண்டும். 1976 ஆம் ஆண்டில் இருந்து சிஎம்டிஏவில் சிஇஓ பதவி இருந்து வருகிறது. 40க்கும் அதிகமான ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த அமைப்பில் சிஇஓவாக இருந்துள்ளனர். இப்படியான சூழலில், சிஎம்டிஏவில் புதிதாக சிஇஓ பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறுவது முற்றிலும் தவறானது. அதிமுக ஆட்சியில் கடைசி 2ஆண்டுகளாக அந்தப் பதவி நிரப்பப்படாமலிருந்தது. அதனை திமுக தற்போது நிரப்பியது” என தெரிவித்தார். 


ஜி ஸ்கொயர் விளக்கம் 


இந்நிலையில் அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பான வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எங்கள் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.  ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை. ஜி ஸ்கொயர் குழும நிறுவனங்களின் சொத்து மதிப்பு என அவர் குறிப்பிட்ட தொகை தவறானது. மேலும் தவறான முறையில் நாங்கள் சொத்து சேர்த்திருப்பதாக ஜோடிக்கப்பட்டுள்ளது. 


திமுக ஆட்சியமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தொழில் செய்து வருகிறோம். 10 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் கட்டுமானத் துறையில் சிறந்த நிறுவனமாக உள்ளோம். அதிகளவு நிலங்களை ஒரே சமயத்தில் கையகப்படுத்தி அதிக வருமானம் ஈட்டியதாக தவறான தகவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ , அவர்களது கட்டுப்பாட்டிலோ இல்லை. படித்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர் முன்வைக்கும் கருத்துகளை மக்கள் எளிதாக நம்பும் ஆபத்து இருக்கிறது. அண்ணாமலை குற்றச்சாட்டால் பல ஆண்டுகள் உழைப்பால் கிடைத்த வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.