நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.


அமைச்சர் ஆலோசனை:


சென்னையில் உள்ள கோயம்பேடு மொத்த சந்தைக்கான தக்காளி வரத்து குறைந்தத அடுத்து, தக்காளி மொத்த விலை கிலோ 90 ரூபாயை எட்டியுள்ளது. இதனால் சில்லறை விலையானது ஏற்கனவே ரூ.120-ஐ கடந்து விற்பனயாகி வருகிறது. இதனால், இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக, அமைச்சர் பெரியகருப்பன் தலைமை செயலகத்தில் துறைசார் அதிகாரிகள் உடன் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். 


அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு:


அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் “ அகில  இந்திய அளவில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. எனவே, அந்த விலையை கட்டுபடுத்த பண்ணைப் பசுமைக் கடைகளை போல ரேஷன் கடைகளிலும் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்கப்படும். முதற்கட்டமாக சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும். வடசென்னயில் 25 ரேஷன் கடைகள், தென்சென்னையில் 35 ரேஷன் கடைகள் மற்றும் மத்திய சென்னையில் 22  என பிரித்து சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.  சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் மொத்தமாக 111 கடைகளில் குறைந்தது 50 முதல் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும்.  விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். நுகர்வோருக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.


தங்கமான தக்காளி:


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி மொத்த வியாரிகள் விற்பனைக்காக காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் இருந்து பல ரக காய்கறிகள்  வரும். கோயம்பேடு சந்தையிலிருந்து சிறு மொத்த வியாபாரிகள் தேவையாக காய்கறிகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் சில்லறை வியாபாரத்தில் காய்கறிகளின் விலை 20 முதல் 30 ரூபாய் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை தரும். பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் அநேக மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இருக்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சரிந்த வரத்து - உயர்ந்த விலை:


 தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை தக்காளியின் விலை 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை ரூ.100 வரை உயர்ந்தது.  ஜூன் 27 ஆம் தேதி தக்காளி ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 75 ரூபாய்க்கும் 60 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் உயர்ந்து ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் என்ன சமைப்பது என தெரியாமல் திக்கு முக்காடியுள்ளனர். மொத்த வியாபார கடைகளில் ரூயாய் 90 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 120 முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.