சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் நீண்ட நேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. எனவே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. அந்த வகையில் பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக குறிப்பிட்ட இடத்திற்கு உடனடியாக சென்று சேர மெட்ரோ ரயில் பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது. இதனையடுத்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை பயன்பாட்டிலிருந்து முழுமையாக சிங்கார சென்னை அட்டைக்கு  மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிங்கார சென்னை பயண அட்டை

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் "சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது போக்குவரத்து அட்டை)” அறிமுகப்படுத்தியது. இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், 01.05.2026 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் “சிங்கார சென்னை அட்டைக்கு (தேசிய பொது போக்குவரத்து அட்டை)" முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.

பழைய பயண அட்டை தொகை மாற்றம் செய்து கொள்ளுங்கள்

எனவே, மெட்ரோ இரயில்களில் பயணம் செய்யவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி (Mobile App) மூலம் பெறப்படும் QR Stored Value Pass (SVP) அல்லது மாற்றிக்கொள்ளுமாறு தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை வழங்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். உங்கள் மேலான ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.