அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவித்தது செல்லாது என அறிவிக்க வேண்டுமென்று ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.


அடுத்த அதிரடிக்கு தயாரான ஓபிஎஸ்:


ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய கடிதத்தில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தன்னுடைய கடிதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதம் எனவும் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் தொடரப்பட்ட 3 வழக்குகள் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.


சட்ட போராட்டம்:


அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. வரும் மார்ச் 26-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.


இதற்கு மத்தியில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த விவகராத்தில், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தனித்தனியே மனு  தாக்கல் செய்துள்ளனர்.


பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு மாலையிலேயே சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 


பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் மட்டுமின்றி நீதிமன்றத்துக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல் என குற்றம் சாட்டியுள்ளனர். கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருந்தாலும் பொதுச்செயலாளர் தேர்தல் விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதி கே. குமரேஷ்பாபு முன்பு நாளை காலை 10 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. 


எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தர முயற்சி:



அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மோதல் உச்சத்திற்கு சென்ற நிலையில், கடந்த மாதம் பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 


அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தது முதல் இ.பி.எஸ். தரப்பினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம், இடைத்தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தோல்விகள் காரணமாகவும், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் தரப்பினரின் வியூகம் காரணமாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.