மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அண்ணன் சக்கரபாணி மகள் லீலாவதி சென்னையில் இன்று காலமானார்.


லீலாவதி உடல்நலக்குறைவால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். லீலாவதி, 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவருக்கு தன்னுடைய சிறுநீரகத்தை வழங்கினார். இத்தனை வருடங்களாக ஒரு சிறுநீரகத்துடன் வாழ்ந்து வந்த அவர் இன்று உயிரிழந்தது. அதிமுகவினருக்கும், எம்ஜிஆரின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


லீலாவதியின் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


ஓபிஎஸ்- இபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:


எம்ஜிஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி மகள் லீலாவதி அம்மையார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணா துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.  எம்ஜிஆர் 1984-இல் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவருக்கு தன்னுடைய சிறுநீரகத்தை அளித்து, எம்ஜிஆரை வாழவைத்த லீலாவதி அம்மையார் 37 ஆண்டுகள் இப்பூவலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து இன்று இயற்கை எய்தியதை அறிந்த எம்ஜிஆரின் கோடானுகோடி அன்புத் தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது. லீலாவதி அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.


டிடிவி தினகரன் இரங்கல் செய்தி


 ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அண்ணன் M.G.சக்கரபாணியின் மகள் லீலாவதி  மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். புரட்சித்தலைவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது தன்னுடைய சிறுநீரகத்தை அவருக்கு அளித்த பெருமைக்குரிய லீலாவதியின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறேன்’ என தினகரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


 


 










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண