முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அத்துமீறி வீட்டில் நுழைந்ததாக பல்வேறு பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் மீது அதிகாரியிடம் தவறாக நடந்து  கொண்ட   வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கி வரும்,  ராஜேஷ் தாஸ் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி.


 


1. முன்னாள்  தலைமை காவலர் வீட்டில் கூட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் பொழுது யோசிப்பார்கள் உங்கள் விஷயத்தில் யோசிக்காமல், மின்சாரத்தை துண்டித்தது ஏன் ?


ராஜேஷ் தாஸ்: நான் இந்த வீட்டிற்கு 18ஆம் தேதி வந்திருந்தேன். அதற்கு அடுத்த நாள் மாலை மின்சார ஊழியர் ஒருவர் வந்திருந்தார். எல்லோரும் கூறுகிறார்கள் மேலிருந்து அழுத்தம் கொடுக்கிறார்கள். டிஜிபியாக இருந்தால் என்ன,  தலைமை காவலராக இருந்தால் என்ன  மேலிருந்து உத்தரவு வந்தால் இவர்கள் செய்து விடுவார்கள். 19 ஆம் தேதி எந்த கடிதமும் இல்லாமல் வந்தார்கள் 20ம் தேதி மின்சாரத்தை துண்டித்து விட்டார்கள். எந்தவித காரணமும் இல்லை,  நோட்டீஸ் கொடுக்கவில்லை. மின்சார ஊழியர்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும்.   இங்கு நான் இருக்கிறேன் என அனைவருக்கும் தெரியும்.



2.  வீட்டு இடம் தொடர்பாக என்ன பிரச்சனை ?  அதில்  எக்கச்சக்க குழப்பம் வர காரணம் ஏன் ?


 ராஜேஷ் தாஸ்: 1999 இல் இந்த இடத்தை வாங்க வந்தேன். நான் எனது எதிர்காலத்தில் ஓய்வு எடுக்க வேண்டும் என எண்ணத்தில் இந்த இடத்தை வாங்கினேன்.  இது என் முன்னாள் மனைவியின் அப்பா சொத்து கிடையாது. ஒரு பகுதி மட்டுமே அவரின் அப்பா பெயரில் வாங்கினோம், மீதம் ஒரு பகுதி எனது நண்பர் பெயரில் உள்ளது. இது நான் வாங்கிய இடம் இதற்கு யாரும் பணம் தரவில்லை.


3.  நீங்கள் இந்த வீட்டில் இருந்த காவலாளியை அடித்து விரட்டி இருக்கிறீர்கள் ?  பத்து பேருடன் வந்து அவர் மிரட்டலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? சாதாரண நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பொழுதே காவல்துறையினர்  குறைந்தபட்ச ஆதாரத்தை எதிர்பார்க்கும் பொழுது,  உச்சபட்ச பதவியில் இருந்த உங்கள் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள் என்றால் ஒரு சதவீதமாவது உண்மை இருக்கும் அல்லவா ?


ராஜேஷ் தாஸ்:  ஒரு சதவீதம் இதில் உண்மையாக இருந்தால் நான் இந்த வழக்கில் கைதாக ரெடி. 19ஆம் தேதி முதல்முறையாக நான், இந்த இடத்தில் விட்டுச் சென்ற பொழுது வீடில்லாததால் புகார் அளித்தேன்.  இங்கு யார் வந்து சென்றார்கள் என விசாரிக்க வேண்டும் என புகார் கொடுத்து இருந்தேன். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் வர உள்ளது,  அவர்களுக்கு இந்த சொத்து வேண்டும். சொத்துக்காக இந்த பிரச்சனை செய்கிறார்கள். காவல்துறைக்கு மேலிருந்து அழுத்தம் வருவதாக கூறுகிறார்கள். எனக்கு  அனைத்து கடிதங்களும் இந்த முகவரிக்கு தான் வந்து கொண்டிருக்கிறது.  


4. பின்னணியில் ஒருவர் இருப்பதாக கூறுகிறீர்கள். இதை யார் செய்கிறார்கள் என உங்களுக்கு தெரியுமா   ?


ராஜேஷ் தாஸ்: யார் என்று எனக்கு நன்றாக தெரியும். அது குறித்து நான் தலைமைச் செயலகத்திற்கும் நீதிபதிக்கும்  புகார் எழுப்பி உள்ளேன். அவர்கள் கைது செய்வதற்கு முன்பு இதுகுறித்து நான் புகார் அளித்து விட்டேன். என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது. என் மீது பொய் வழக்கு போட்டு விட்டார்கள்.


5.  மற்றொரு பெரிய வழக்கு தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கில் ஏதாவது உண்மை உள்ளதா ?


ராஜேஷ் தாஸ்:  அந்த வழக்கு இதைவிட மோசமான வழக்கு. இது பொய் வழக்கு,  இதுகுறித்து நான் எந்த கேள்வி கேட்டாலும் பேசுவேன், ஆனால் இப்பொழுது இல்லை. கண்டிப்பாக ஒரு முறை ஊடகத்தில் கூற வருவேன். அதை ஊடகத்தில் போட்டு பெரிதாகி விட்டார்கள்.  ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்தில் நான் பேச வந்து விடுவேன். இனி யாரும் ஒளிந்து இருக்க முடியாது,  இதை நான் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறேன். நான் சவால் விடுகிறேன்  என தெரிவித்தார்