குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகராக பணியாற்றிய பொன்ராஜ் தற்போது அரசியல் களத்தில் உள்ளார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சிக்கும் வகையில் பேசிய அவர், அக்கட்சியின் பெண் தொண்டர்களை விபச்சாரிகள் என்பது போல் பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியிருந்தார். ஆனால், ஒருவழியாக மன்னிப்பு கேட்டு அவர் பதிவிட்டுள்ளார்.

தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசிய பொன்ராஜ்

அரசியலில் குதித்த பொன்ராஜ் தற்போது திமுக ஆதரவு நிலைப்பாட்டுடன் இருக்கிறார். இந்நிலையில், தனியார் யூடியூப் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், தவெக பெண் தொண்டர்களை மிகவும் தரக்குறைவாக பேசினார். அதாவது, "ஒரு அறிவார்ந்த தமிழ்நாடு. கல்வி விகிதத்தில், படிப்பறிவில் சிறந்த தமிழ்நாடு. இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இப்படி ஒரு தற்கூறி கூட்டம் இருக்கிறது என்பதை காட்டிக்கொடுத்ததற்கு விஜய்க்கு நன்றி தெரிவிக்க வேண்டும். வரைமுறை இல்லாத தற்குறி கூட்டம்.“ என்று கூறினார்.

மேலும், “புருஷன் எனக்குத் தேவையில்லை. எனக்கு விஜய்தான் வேண்டும் என்று சொல்லும் விபச்சார கூட்டம். அண்ணாவாக இருந்தாலும், தங்கையாகவும் இருப்போம், அக்காவாகவும் இருப்போம், பொண்டாட்டியாகவும் இருப்போம் என்று சொல்லும் விபச்சாரி ரசிகைகள் நிறைந்த தற்குறி கூட்டம் இருக்கிறது என்பதை உலகத்திற்கு வெளிக்காட்டியதற்கு விஜய்யை பாராட்ட வேண்டும்" என்று பேசினார்.

விஜய் கண்டனம் - காவல்துறையில் புகார்

பொன்ராஜின் இந்த பேச்சு, தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில்,  இதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ’’இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராக செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.

திமுக தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். தவெக-வை சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால், தீய சக்தி திமுக மண்ணை கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி’’ என்று கூறியிருந்தார்.

அதோடு நிறுத்தாமல், பொன்ராஜ் மீது காவல்துறையில் பரபரப்பு புகார் ஒன்றையும் அளித்துள்ளார் விஜய். அந்த புகார் மனுவை, சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு அவரே நேரில் சென்று வழங்கினார்.

“மன்னிப்பு கேட்க முடியாது“

இந்த நிலையில், ABP நாடு சார்பாக  பொன்ராஜை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, “அந்த வார்த்தையை பயன்படுத்தியது சரிதான் என்றும், இந்த மாதிரி ஆட்களுக்கு இப்படித்தான் பேசி ஆக வேண்டும். வேறு வழியில்லை. யாராக இருந்தாலும் இப்படித்தான் பேசுவேன். இவர்களை இப்படி கையாண்டால் மட்டுமே இவர்களுக்கு புத்தி வரும்“ எனவும் தெரிவித்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது.

ஒருவழியாக மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்

இப்படிப்பட்ட சூழலில், விஜய்யின் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்ட பொன்ராஜ், அதன் பின்னர் மற்றொரு பதிவில், மன்னிப்பு கோரி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன்“ என அவர் கூறியுள்ளார்.