முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பிணையில் விடுவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் கரூரைச் சேர்ந்த திமுக தொழிலதிபர் தொகை முருகன் 5 ஆயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து அளித்தார். மேலும், செந்தில்பாலாஜி படத்திற்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி 471 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மாலை பிணையில் வெளியே வந்தார். இதைக் கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட திமுகவினர் பல இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதன் தொடர்ச்சியாக கரூர் அடுத்த செம்படாபாளையத்தில் திமுகவை சேர்ந்த தொழிலதிபர் தோகை முருகன் என்பவர் பொதுமக்கள் 5 ஆயிரம் பேர்களுக்கு பிரியாணி வழங்கி விருந்து அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புகலூர் நகராட்சி தலைவர் குணசேகரன் நான் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார். முன்னதாக ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி படத்திற்கு பூக்கள் தூவியம் பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இதற்காக,1500 கிலோ சிக்கன், 5000 முட்டை, 750 கிலோ அரிசியில் பிரியாணி தயாரிக்கப்பட்டு பொட்டலமாக கட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 10 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.
செம்மடாம்பாளையத்தை சேர்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பிரியாணி பொட்டலங்களை வாங்கிச் சென்றனர். தொழிலதிபர் தோகை முருகன், கொரோனா தொற்று காலத்தில் துப்புரவு பணியாளர்கள் பாத பூஜை செய்து அவர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கி அவர்களை கெளரவப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஒரு மாதம் பொதுமக்களுக்கு தினசரி கலவை சாதம் அன்னதானமாக வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜி பிணையில் வெளியே வந்த்தைக் கொண்டாடும் வகையில் 5000 பேர்களுக்கு பிரியாணி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.