தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசியுள்ளார். நேற்றைய தினம் உயர்நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இன்று பொன்முடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். 


பொன்முடியின் சொத்துக்களை மீண்டும் முடக்க கோரி லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று காலை தீர்ப்பு வழங்குகினார்.


2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் ரூ.1.75 கோடிக்கு மேல் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் குவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.  மேலும் அவரது சொத்துக்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியது.


கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவியை விழுப்புரம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும், சொத்துக்கள் முடக்கத்தையும் நீக்கியது. விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்தும் சொத்துக்கள் முடக்கத்தை நீக்கியதை எதிர்த்தும் லஞ்ச ஒழிப்புத்துறை தனித்தனியே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிவ்ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தன்டனை விதித்து நேற்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ள நிலையில், சொத்து முடக்கத்தை விழுப்புரம் நீதிமன்றம் நீக்கியது எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் இன்று காலை நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.


இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சரை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்துள்ளார். நேற்று தீர்ப்பு வந்த போது முதலமைச்சர் தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். நேற்று இரவு சென்னை வந்த நிலையில் இன்று காலை பொன்முடி சென்று சந்தித்துள்ளார். கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் என்ற முறையிலும், சட்டதுறை அமைச்சர்  ரகுபதி, கட்சியின் முக்கிய அதிகாரிகள் பொன்முடியை நேரில் சந்தித்தனர் கட்சி உடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலும் கட்சியின் மூத்த துணைப்பொதுச் செயலாளருக்கு இது போன்ற தீர்ப்பு வந்திருப்பது தொடர்பாகவும் முதலமைச்சரிடம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடி, விழுப்புரம் மாவட்ட செயலாளர்,  5 முறை சட்டமன்ற உறுப்பினர் என முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.