அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றலாம் என மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினர். அப்பொழுது ஒரு தரப்பினர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
மேலும் ஒரு சிலர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரி முழக்கமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு, ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பேசினார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் “ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பேசினார்கள். அதிமுக தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் சரி இப்போது எதிர்ப்பார்ப்பது ஒற்றைத்தலைமை தான். அந்த ஒற்றைத்தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும். யார் ஒற்றை தலைமையாக வருவார்கள் என்பது சஸ்பென்ஸ். சசிகலா யார்? அவரைப்பற்றி ஏன் விவாதிக்க வேண்டும். நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதை பெரும்பாலான நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.” எனத் தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக இப்பொழுது நடைபெற்ற கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் ஆரோக்கியமான முறையில் பெரும்பாலான தலைமைக்கழக நிர்வாகிகள், பெரும்பாலான மாவட்ட கழக செயலாளர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அந்த ஒற்றை தலைமை பொறுப்புக்கு யார் வருவார்கள் என்பது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை. அதுகுறித்து கட்சி முடிவு செய்யும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாமறைவிற்கு பிறகு, இரட்டை தலைமை என்ற முறையில் அதிமுக செயல்பட்டு வந்தது. அதிமுகவில் அன்று இருந்த காலம் வேறு. இப்பொழுது இருக்கும் காலம் வேறு. இன்றைய காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் ஒற்றை தலைமை கோரிக்கை வைக்கப்பட்டது என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்