6 மாசம் கழிச்சி கேட்கணுமா? - அதுவரை நீங்க இருப்பீங்களா? - விஜயை வறுத்தெடுத்த அனிதா ராதாகிருஷ்ணன்!
லாட்டரி சீட்டை அரசே கொண்டு வரப்போவதாக ஒரு தகவல் கூட வந்திருக்கிறது. அது எந்தளவு உண்மை என தெரியவில்லை. தமிழ்நாடு குட்டிச்சுவராக மாறிவிடுமோ என்ற அச்சம் மக்களிடத்தில் உள்ளது என அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

குற்றம் எப்போது நடந்தாலும் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை என முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் திமுகவை சரமாரியாக விமர்சித்தார். தவெக அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், இதற்கெல்லாம் முந்தைய திமுக அரசு குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் என தெரிவித்தார். இதற்கு திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
6 மாதம் வரை தவெக ஆட்சி தாங்காது
அப்போது, “6 மாதம் வரை தவெக ஆட்சிக்கு அவகாசம் தருவோம் என மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால் பதவியேற்று அரைமணி நேரம் கூட ஆகவில்லை. குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்?” என முதலமைச்சர் விஜய் தெரிவித்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அனிதா ராதாகிருஷ்ணன், “நாங்கள் நடத்துவது அரசியல் கட்சி. எந்த குற்றச்சாட்டு எப்போது நடந்தாலும் அதை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சியின் கடமையாகும். அந்த கடமையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். அதுமட்டுமல்ல திமுகவில் உள்ள பெரிய தலைவர்கள் எல்லாம் செய்கிறார்கள். அதனால் 6 மாதம் கழித்து விமர்சிப்பதாக சொன்னீங்களே என கேட்கிறார்கள். இந்த ஆட்சியே 6 மாதம் இருக்குமான்னு தெரியல. அப்படி இருக்கும்போது 6 மாதம் கழித்து யாரிடம் போய் கேட்பது?” என தெரிவித்தார்.
குட்டிச்சுவராகும் தமிழ்நாடு
அடுத்ததாக, “திமுக அரசு வீழ்ந்ததற்கு காரணம் அதிகமான போதைப்பொருட்களின் புழக்கமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தான். அப்படிப்பட்ட சூழல் உருவாகிவிட்டதே முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளாரே?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!
இதற்கு பதிலளித்த அவர், “நடிகர் விஜய் அப்படி பேசியிருக்கிறாரே, இன்றைக்கு தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. பாலியல் வன்கொடுமையால் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்?.. தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தல் எப்படி இருக்கிறது?.. கள்ள லாட்டரி சீட்டு விற்பனை நடக்கிறதே? .. லாட்டரி சீட்டை அரசே கொண்டு வரப்போவதாக ஒரு தகவல் கூட வந்திருக்கிறது. அது எந்தளவு உண்மை என தெரியவில்லை. தமிழ்நாடு குட்டிச்சுவராக மாறிவிடுமோ என்ற அச்சம் மக்களிடத்தில் உள்ளது” என கடுமையாக விமர்சித்தார்.
அடுத்த தேர்தலில் தவெக இருக்காது
இதனையடுத்து அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியே இருக்காது என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, ஒருவேளை அடுத்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் இருக்காது என்பதை தான் அவர் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன் என அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அடுத்ததாக அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புது கட்சி தொடங்கப்போகிறார் என தகவல் வந்துள்ளதே என்ற கேள்விக்கு, “அது அவரின் உட்கட்சி விவகாரம். அண்ணாமலை பாஜகவில் தொடரலாம் அல்லது தனிக்கட்சி தொடங்கலாம். இது அவருடைய எண்ணம். அதனால் பொறுத்திருந்து பார்க்கலாம்” என அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்





















