முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து காலமானார். கருணாநிதி-பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க. முத்து. 77 வயதான அவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்தார். அவரது உடல், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அங்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மு.க. முத்து உடலுக்கு ஆஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், திமுகவில் இன்று முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அதில், பிள்ளையோ பிள்ளை திரைப்படம், அவரது தந்தை கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான படமாகும். தனது கலை வாரிசாக மு.க. முத்துவை முன்னிறுத்த கருணாநிதி முயற்சி மேற்கொண்டதன் விளைவாகவே, மு.க. முத்து அரசியல் பக்கம் வராமல், திரையுலகின் பக்கம் திரும்பினார்.
ஆனால், திரையுலகிலும் பெரிய அளவில் அவர் சோபிக்க முடியாமல் போனது. எம்ஜிஆருக்கு போட்டியாகவே அவர் உருவாக்கப்பட்டுவருவதாக அந்நாளில் கூறப்பட்டது. ஆனால், அது நடக்காமல் போகவே, சில படங்களில் நடித்த மு.க. முத்து, அதன் பின் திரையுலகிலிருந்து விலகி இருந்தார். அரசியலிலும் ஈடுபாடு இல்லாததால் மொத்தமாக ஒதுங்கிக் கொண்டார்.
மு.க. முத்துவிற்கு அறிவுநிதி என்ற மகன் உள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வந்த மு.க. முத்து, வயது மூப்பு காரணமாக, கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க. முத்துவின் மறைவிற்கு, அரசியல் பிரமுகர்களும், பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.