தேர்தல் என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்களவை தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்படுகிறது.


சட்டப்பேரவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருந்தாலும், பல்வேறு மாநிலங்களின் பதவிக்காலம் வெவ்வேறு தேதிகளில் நிறைவுபெறுகிறது.


அதேபோல, மற்ற கட்சிகளின் உதவியோடு கூட்டணி அமைக்கும்பட்சத்தில் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை திரும்பப்பெற்று பெரும்பான்மையை இழக்கும் சமயங்களிலும் தேர்தல் நடத்தப்படுவது அவசியமாகிறது.


இச்சூழலில்தான், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதாவது, மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களையும் நடத்துவதே இதன் நோக்கம்.


இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய சட்டத்துறை அமைச்சகம் பழனிசாமியை அதிமுகவினுடைய பொதுச் செயலாளராக அங்கீகரிப்பதாக கருத வேண்டி இருக்கிறது என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


அதிமுகவில் யார் தலைமை என்ற விவகாரம் இன்னமும் நீடித்து வரும் நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சகம் பழனிசாமியை அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது அரசியலில் முக்கிய நகர்வாக கருதப்படுகிறது. 


கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். அதேநேரம் அதிமுக கட்சியை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் வெடித்தது.


இதையடுத்து, ஒ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனால் இருதரப்புக்கு இடையேயான மோதல் தீவிரமடைய, உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியது.


இச்சூழலில், 2024 அதிமுக தலைமையில் மிகப்பெரும் கூட்டணி அமைக்கப்படும் எனவும், அமித் ஷா தமிழகத்திற்கு வந்தால் அவரை சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் எடப்பாடிபழனிசாமி கூறினார். 


இதனால், கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றிவிட ஈபிஎஸ் முடிவு செய்துள்ளதாகவும், அதிமுகவின் ஒரே தலைமை தானே என முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.