கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், சில வாக்குச்சாவடிகளில் கள்ளஓட்டு போடும் சம்பவங்கள் நடைபெற்றதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 


இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட 49-வது வார்டில் கள்ள ஓட்டுகள் பதிவு செய்ததாக திமுக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 47(கலகத்தில் ஈடுபடுதல்), 148 (பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல்), 294(பி) (ஆபாசமாக திட்டுதல்), 153 (கலகம் செய்ய தூண்டி விடுதல்), 355 (தாக்குதலில் ஈடுபடுதல்), 323 (காயம் ஏற்படுத்துதல்), 324 (ஆயுதம் அல்லது வேறு வழிகளில் காயம் ஏற்படுத்துதல்),  506(2) கொலை மிரட்டல் மற்றும்  பொதுசொத்தை சேதப்படுத்தல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  


இந்த கைது நடவடிக்கைக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


முன்னதாக, கோயம்பத்தூர் மாநகரிலும், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திமுகவினர் ஜனநாயக முறைகேடுகளில் ஈடுபடுவதாக அதிமுக தெரிவித்திருந்தது. கரூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த குண்டர்கள் கோவை மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டு பரிசுப் பொருட்களை வழங்கி கலவரத்தை ஏற்படுத்துவதாக கூறி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  இதனையடுத்து, போராட்டம் நடத்திய வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் குண்டு கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர். 


தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கைது தொடருமா?   


திமுக தனது தேர்தல் அறிக்கையில், முந்தைய அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த  முக்கிய அமைச்சர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது. அதற்கேற்ப, ஆட்சி அமைத்தவுடன், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு டிஜிபி பதவி நிலை உயர்த்தப்பட்டு கந்தசாமி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, மாதம் ஒருமுறை முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.   


எம்.ஆர்.விஜயபாஸ்கர்:   


இதில், முதலாவதாக, 2021 ஜூலை 21 அன்று  தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பனிக்காலத்தில் வருமாத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளது  தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில், இந்த சோதனையில் பணம் ரூ.25,56,000/- மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.  




எஸ்.பி வேலுமணி:   2021, ஆகஸ்ட் 10 ம் தேதியன்று எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 13 இலட்ச ரூபாய் பணம்,  2 கோடி ரூபாய்க்கான வைப்புத்தொகை, முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. மேலும், எஸ்.பி. வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட வங்கி லாக்கர் சாவியை கொண்டு, இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் லாக்கரை திறந்து சோதனை நடத்தினர். 


கே.சி வீரமணி:  2021, செப்டம்பர் மாதம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் வீடு அவருக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 35 இடங்களில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கில் வராத 34 லட்சம் ரொக்கம், 1.80 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம், ரோல்ஸ் ராய்ஸ்உள்பட 9 கார்கள், 5 கிலோ தங்க நகைகள், 7 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்ததுடன், பதுக்கப்பட்டு வைத்திருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 275 யூனிட் மணலையும் பறிமுதல் செய்துள்ளனர்.


சி.விஜயபாஸ்கர்:   கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் அமைச்சராக இருந்த போது மனைவி மற்றும் மகள்கள் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்ததாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து இவர் மீதும் இவர் மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சோதனையை தொடங்கினர்  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.


தங்கமணி: கடந்தாண்டு டிசம்பர் மாதம் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்சஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டில் 69 இடங்களில் தங்கமணி தொடர்புடைய இடங்களில் தற்போது சோதனை நடைபெற்றது. கடந்த ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக தங்கமணி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அன்பழகன்: 2022 , ஜனவரி மாதம்  முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடத்தினர். வருமானத்துக்கு அதிகமாக முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ரூ.11.32 கோடி சொத்துக்களை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.   


மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, முன்னாள் அமைச்சரும், கோவை புறநகா் வடக்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி வேலுமணி  விரைவில் கைது செய்யப்படலாம் என்று அரசியல் வட்டராங்கள் தெரிவிக்கின்றன  


கடந்த 9 மாதகால திமுக ஆட்சியில், அதன் சர்வாதிகார போக்கு வெளிப்பட்டு விட்டதாக அதிமுக சாடி வருகிறது. மேலும், தனது அரசியல் செல்வாக்கு குறைந்து வருவதால், அதனை மடைமாற்றும் விதமாக லஞ்சஒழிப்புத் துறையை ஏவி வருவதாகவும் தெரிவிக்கிறது.