அதிமுக முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமானவர் தோப்பு வெங்கடாச்சலம். இவருக்கு கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், அவருக்கும் கட்சித் தலைமைக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவிவந்தது. இந்த நிலையில், தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியது.


இந்த சூழலில், இன்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இணைந்தார். சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் சேர்ந்து அவரது ஆதரவாளர்கள் 900 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். கடந்த சட்டசபை தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத காரணத்தால், இவர் சுயேச்சையாக போட்டியிட்டார். இதன் காரணமாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.