சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டு

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்தி தவெக ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக சமூகவலைதளங்களில் தமிழக தேர்தல்களில் வாக்களிக்க செல்கிறோம் என ஏராளமான வெளிநாட்டில் பணிபுரியம் தமிழர்கள் ரீல்ஸ் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் குடியுரிமை துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வெளிநாடு குடியுரிமை பெற்றவர்களின் கைகளில் ஓட்டு போட்டதற்கான அடையாள மை இருந்துள்ளது. இதனை பார்த்த குடியுரிமை அதிகாரிகள் அந்த பயணிகளிடம் நடத்திய விசாரணையில் தங்களது உறவினர் பெயரில் உள்ள வாக்குகளை பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

விமான நிலையத்தில் சோதனை

இதனையடுத்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் 17 பேர் தமிழக தேர்தல்களில் கள்ள ஓட்டு போட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்திய போது உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமைப் பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்தது தெரியவந்துள்ளது. கனடா குடியுரிமை பெற்ற ஜிதேந்திரநாத், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சந்திரசேகர ரகுபதி, இலங்கையை சேர்ந்த ஒருவர் என 3 பேரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வெளிநாட்டினர் 17 பேர் கைது

அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் கள்ள ஓட்டு போட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் வெளிநாடு குடியுரிமை பெற்றவர்கள் தமிழகத்தில் யார்.? யார்.? தேர்தலில் வாக்களித்துள்ளனர் என குடியுரிமை அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.