புதுச்சேரி: தற்போது வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். வானிலை எச்சரிக்கை அறிவிப்பினை மீறி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை 01.12.2023 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் நாளை மறுநாள் (03.12.23) அது புயலாக மாறி ,04.12.23 வாக்கில் வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை புயல் நெருங்கும் என வானிலை ஆய்வு மையத்தின் மூலம் தெரிய வருகிறது.


இதன் காரணமாக வரும் டிசம்பர் 3-ந் தேதியன்று வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக் கூடும். டிசம்பர் 4-ந் தேதியன்று வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கி.மீ வேகத்திலும் வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு நவம்பர் 30-ந் தேதியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்தந்த கிராம மீன் வளத்துறை அதிகாரிகள் மூலமாகவும் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்கள் மூலமாகவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது.இதுமட்டுமில்லாமல், மீன்வளத் துறையிலிருந்து புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த அனைத்து மீனவர்களின் மொபைல் எண்ணிற்கும் இந்த வானிலை எச்சரிக்கை தனி தனியாகவும் BSNL குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


எனவே மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீண்டும் ஒரு முறை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படுகிறது. வானிலை எச்சரிக்கை அறிவிப்பினை மீறி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே புதுச்சேரி பகுதியைச்  சேர்ந்த மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.