உரிமம் பெறாத இறால் பண்ணைகள் மீது அதிரடி நடவடிக்கை! மீன்வளத்துறை எச்சரிக்கை!
சென்னை: உரிய அனுமதியின்றி செயல்படும், கடலோர உவர் நீர் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை: உரிய அனுமதியின்றி செயல்படும், கடலோர உவர் நீர் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாதவர்கள் முறையாக விண்ணப்பித்து, உரிமம் பெற வேண்டும் என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது…
இறால் பண்ணைகள் அமைக்க, உரிமம் பெறுவது கட்டாயம். உரிமம் வேண்டி விண்ணப்பிக்காமலும், உரிமம் இல்லாமல் இயங்கினாலும், இறால் பண்ணைகளின் இயக்கம் நிறுத்தப்படும். இது தொடர்பாக, முதலில் எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கப்படும். அதன்பின், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பண்ணைகளின் செயல்பாடு முற்றிலும் முடக்கப்படும். அதை தவிர்க்க, அனைவரும் பண்ணைகளை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பதிவு செய்து உரிமம் பெற்றவர்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து, தமிழ்நாடு கடலோர இறால் வளர்ப்போர் சங்கத் தலைவர் ரவிபாண்டியன் கூறியதாவது, தமிழகத்தில் 3000க்கும் மேற்பட்ட உவர்நீர் இறால் பண்ணைகள் உள்ளன. அனைத்து பண்ணைகளும் உரிமம் பெற்று தான் அமைக்கப்படுகின்றன. நிறைய பண்ணை உரிமையாளர்கள் உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர் என்றார்.
இறால் பண்ணை
இறால் பண்ணை என்பது வர்த்தகரீதியான மீன்வளர்ப்பு முறையில் மனித உணவுக்குப் பயன்படும் கடல் இறால் அல்லது கூனிறால்களை வளர்க்கும் பண்ணை ஆகும். வர்த்தகரீதியான இறால் விவசாயம் 1970களில் தொடங்கியது. அதன்பின் உற்பத்தி மிக அதிக வளர்ச்சி கண்டது. குறிப்பாக அமெரிக்கா, சப்பான் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் தேவைகளுக்கே இவை அதிகமாய் சேவை புரிகின்றன. வளர்ப்பு இறால்களின் உலகளாவிய உற்பத்தி 2003 ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் டன்களுக்கும் அதிகமான அளவை எட்டியது.
வளர்ப்பு இறால்களில் சுமார் 75% ஆசியாவில் விவசாயம் செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக சீனா மற்றும் தாய்லாந்தில் தான் அதிகமாய் விவசாயம் செய்யப்படுகின்றன. எஞ்சிய 25% முக்கியமாக இலத்தீன் அமெரிக்காவில் இருந்து வருகிறது. பிரேசில் தான் இதில் மிகப் பெரும் உற்பத்தியாளராய் உள்ளது. தாய்லாந்து தான் மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு ஆகும்.
இறால் குஞ்சு வளர்ப்பகங்கள்
விவசாயிகள் தொட்டிகளில் இருந்து முதிர்வளர்ச்சி குட்டைகளுக்கு லார்வாவுக்கு பிந்தைய குஞ்சுகளை மாற்றுகின்றனர். பல பண்ணைகளில் குஞ்சு வளர்ப்பகங்கள் இருக்கின்றன. இவை வளர்ந்த இறால் லார்வாக்களை இன்னுமொரு மூன்று வாரங்கள் தனித்தனி தொட்டிகளில், குளங்களில் அல்லது நீர்ப்பாதை குட்டைகளில் வளர்த்து இளம் குஞ்சுகள் ஆக்குகின்றன. நீர்ப்பாதைக் குட்டை என்பது செவ்வகமாகவும் நீளமாகவும் இருக்கும். இதில் நீர் தொடர்ந்து பாய்ந்து கொண்டும் வெளியேறிக் கொண்டும் இருக்கும்.
சாதாரணமான ஒரு வளர்ப்பகத்தில், சதுர மீட்டருக்கு 150 முதல் 200 இறால்கள் வரை இருக்கும். அங்கு அவற்றுக்கு அதிகப்பட்சம் மூன்று வாரங்கள் வரை உயர்ந்த புரதத்துடனான உணவு வழங்கப்படும். பின் அவை முதிர்வளர்ச்சித் தொட்டிகளுக்கு மாற்றப்படும். இந்த சமயத்தில் அவை ஒரு கிராமுக்கும் இரண்டு கிராம்களுக்கும் இடையிலான எடையளவினைக் கொண்டிருக்கும். நீரின் உப்புத்தன்மை முதிர்வளர்ச்சித் தொட்டிகளில் இருக்கும் அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் கொண்டுவரப்படும்.





















