கரூர் மாவட்டத்தில் சிறு ஜவுளி பூங்கா அமைக்க அனுமதி வழங்கிய தமிழக கைத்தறி துறை அமைச்சருக்கு, கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் நன்றி தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு ரூபாய் 2.5 கோடி வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
ஜவுளி துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் மூணு ஜவுளி உற்பத்தி தொழில் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொது பயன்பாட்டுக்கான கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.5 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழக அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.
தொழில் முனைவோரின் கோரிக்கையை தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டடங்களையும் சேர்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான தொழிற் பூங்காக்கள் அமைந்து நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும். மேலும், அதிக அளவில் அன்னிய செலவாணி வாய்ப்புகள் ஏற்படும். அன்னிய செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது முதல்வரின் கனவு திட்டமாகும். எனவே சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சி மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன் வர வேண்டும் என்று கலெக்டர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், சிறு ஜவுளி பூங்கா திட்டத்தில் தேவைப்படும் மாற்றங்களைக் கொண்டு வந்து தமிழகத்தில் 100 சிறு ஜவுளி பூங்கா அமைக்க ஏற்பாடு செய்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி , பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரை கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் மெட்ரோ கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் ப்ரீத்வி, செயலாளர் சேதுபதி, பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்