கச்சத்தீவு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தாரா? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கச்சத்தீவு விவகாரம்:
இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கச்சத்தீவை தாரைவாத்து கொடுத்தது திமுக அரசு தான் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கான விளக்கத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று காலை கொடுத்திருந்தார்.
அதில் நேரு கச்சத்தீவை தொல்லை என குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் முயற்சியால் மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி எதிர்த்தாரா?
இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம், ” வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பாஜக ஆட்சியில் இருந்தபோதும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படவில்லையா? 2014 ஆம் ஆண்டிலிருந்து மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படவில்லையா? ” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், “கச்சத்தீவு தொடர்பாக உண்மைக்கு புறம்பாக பொறுப்பற்ற பேச்சு இத்தனை வருடமாக பேசப்பட்டது. காங்கிரஸ் மற்றும் திமுக பல வருடமாக கச்சதீவு தொடர்பான பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. கச்சத்தீவு தொல்லை என நேரு தனது கடிததத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கெல்லாம் முன்னாள் முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தாரா?
எப்போது வேண்டுமானாலும் பேசலாம்?
தமிழர்களுக்கு விரோதமாக காங்கிரஸ் நிறைய செய்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது காங்கிரஸ். தேர்தல் நேரம் என்று இல்லை, முகூர்த்த நேரம் என்று இல்லை சுப முகூர்த்த நேரம் என்று இல்லை கட்ச தீவு பற்றி எப்பொழுது வேண்டுமென்றாலும் பேசலாம். தேர்தல் நேரத்தில் பேச வேண்டும் என்று இல்லை ஒரு நாட்டின் ஒரு பகுதி இழக்க பட்ட விவரம் குறித்து எப்பொழுது வேண்டுமென்றால் பேசலாம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் போட்டியிட வேண்டுமா என்பதை எங்கள் கட்சி தான் முடிவு செய்யும். கட்சி சொன்னால் போட்டியிடுவேன். தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகமான நிதி பெற்றது தி.மு.க. தான். ஒரே நிறுவனத்திடம் இருந்து அதிகமான நிதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் கிடைக்கும் போதைப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கிறது. குஜராத்தில் போதைப்பொருள்கள் பிடிபட்டவுடன் எரிக்கப்படுகிறது” என குறிப்பிட்டு பேசியுள்ளார்.