புதுச்சேரி: தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரியில் நேற்று மாலை வரை 7.5 செ.மீ., மழை பதிவானது. மேலும் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.


ஃபெங்கல் புயல்:


மண்டல வானிலை மையம் நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 320 கி.மீ. புதுச்சேரிக்கு தென்கிழக்கே 410 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 490 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வட-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30-ஆம் தேதி காலையில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடக்கும், காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் வீசும்” என எச்சரித்துள்ளது. 


மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்


வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்ததால், கடந்த 2 நாட்களாக புதுச்சேரியில் மிதமான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பள்ளி கல்லுாரிகளுக்கு அரசு விடுமுறை அளித்தது. மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றம்


நேற்று காலை 10:00 மணி வரை மட்டுமே லேசான மழை இருந்தது. அதன் பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை 7.2 செ.மீ., மழை பதிவானது. காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை 3.6 மி.மீ., மழை பதிவானது. நேற்று மாலை வரை மொத்தம் 7.5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக புதுச்சேரி கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் இறங்கி விளையாட போலீசார் அனுமதி மறுத்தனர். புதுச்சேரி துறைமுகத்தில் மோசமான வானிலை என்பதை குறிக்கும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.


எங்கெல்லாம் இன்று கனமழை பொழிய வாய்ப்பு?


தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:   


தமிழக கடலோரப்பகுதிகள்: 


28-11-2024 முதல் 29-11-2024 வரை: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75  கிலோ மீட்டர் வேகத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 


இன்று காலை காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, ஆழ்கடலில் உள்ள  மீனவர்கள்  உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.