ஃபெஞ்சல் புயலானது, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே மரக்காணத்திற்கு அருகே, இன்று மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க ஆரம்பித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது முழுமையாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இரவு எங்கு அதிகனமழை, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
ரெட் அலர்ட்:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில், இன்று இரவு 10 மணிவரையில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்:
சென்னை , திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மிதமான மழைக்கான மற்றும் சற்று அதிகமான காற்றுக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் லேசான மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மூன்று பகுதிகள்:
புயலை பொறுத்தவரையில், முன் பகுதி, கண் பகுதி மற்றும் பின்பகுதி என மூன்று பகுதிகளாக வகைப்படுத்தப்படும் நிலையில், தற்போது முன்பகுதி கரையை கடக்க ஆரம்பித்துள்ளது. இதனால, கரையை கடக்கும் பகுதிகளில், கனமழை மற்றும் அதீத காற்று வீசும் என்பதால் சேதத்தை ஏற்படுத்தும். இதையடுத்து, 2வது பகுதியான கண்பகுதி நகரும் போது, மிகுந்த அமைதியாக இருக்கும், மழை - அதீத காற்று இருக்காது. இதனை தொடர்ந்து பின்பகுதி நகரும் போது, கனமழை மற்றும் அதீத காற்று இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் , இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும்.