வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏன் புயல் உருவாவதில் தாமதம்?
வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தமானது, நேற்று புயலாக வலுப்பெறக்கூடும் என அறிவிப்பு வெளியான நிலையில், தற்போதுவரை புயல் உருவாகவில்லை. அதற்கு காரணம், எதிர்காற்று வீசுவதால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக வலுப்பெறுவதில் தாமதம் நீடிப்பதாக வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியென்றால், புயல் உருவாகாதா என்ற கேள்வியானது, அனைவருக்கும் எழும். இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது, புயல் உருவாகும், ஆனால் தற்காலிகமானதாக இருக்கும். குறிப்பாக, வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று மாலை புயலாக வலுப்பெற்று, நாளை காலை வரை புயலாக நீடிக்கும். அதனை தொடர்ந்து, வங்க கடலில் உள்ள புயலானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழந்துவிடும் என வானிலை மைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையை எப்போது கடக்கும்?
அதனை தொடர்ந்து, வங்க கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, வரும் 30 ஆம் தேதி கரையை கடக்கும். காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போது எங்கே?
தற்போதைய நிலவரப்படி வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நாகைக்கு தென்கிழக்கே 310 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை:
சென்னையில் இன்று இரவு முதல் மழை ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:
நாளை (நவ.29) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் அதேபோல ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை பெறும் மாவட்டங்கள்:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.