Fengal Cyclone: வெள்ளத்தில் மூழ்கிய திண்டிவனம்; நீரில் முழ்கிய கார்கள் - சோகத்தில் முழ்கிய மக்கள்

திண்டிவனத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. கார், இருசக்கர வாகனம் என நீரில் மூழ்கி சேதம்.

Continues below advertisement

விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது வருகிறது. திண்டிவனத்தில் மழை நீர் வெளியேற முடியாததால் வீடுகளுக்குள் புகுந்தது மேலும் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கியது.

Continues below advertisement

 

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 3 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. குறிப்பாக மழையினால் பாதிக்கப்படுபவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 850 தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டது.

 

மேலும் மரக்காணம், வானூர் ஆகிய தாலுகாக்களில் 12 பேரிடர் பாதுகாப்பு பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தயார்படுத்தப்பட்டு அம்மையங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

நேற்று காலை முதல் விழுப்புரம் மாவட்டத்தில் இடை விடாமல் கொட்டிய மழையால் சாலையெங்கும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. நேற்று காலை முதல் விழுப்புரம் மாவட்ட கிராமங்களில் துண்டிக்க மின் விநியோகம், தற்போது வரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

வெள்ளத்தால் திணறும் திண்டிவனம்

 

திண்டிவனம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழை வெளியேறுவதில் சிக்கல் உள்ளதால் வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமன்றி அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி சேதமானது. மேலும் திண்டிவனத்தில் இருந்து சென்னை செல்லும் சாலை மற்றும் திண்டிவனம் - பாண்டிச்சேரி சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிராமங்களில் புகுந்த வெள்ளம்

மரக்காணம் அருகே கிராமங்களுக்குள் புகுந்த வெள்ள நீர்; மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கானிமேடு , மண்டகப்பட்டு, கொள்ளுமேடு, அசப்போர், நல்லம்பாக்கம், ராய நல்லூர், கந்தம் பாளையம் நகர் ஆகிய கிராமங்கள். இந்த கிராமங்களுக்கு இடையில் செல்கிறது ஓங்கூர் ஆறு. ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு ஆத்தங்கரையோரம் உள்ள கிராமங்களான கானிமேடு, மண்டகப்பட்டு, ராயநல்லூர், அசப்போர் ஆலத்தூர் உள்ளிட்ட கிராமங்களிலும் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பதிப்பகியுள்ளனர்.

வீடூர் அணை திறப்பு 

வீடூர் அணை அதன் கொள்ளளவான 605 மில்லியன் கன அடியில் (32அடி) 487.52 மில்லியன் கன அடியை (30.5அடி) நிரம்பியது அணைக்கு வினாடிக்கு 36, 203 நீர்வரத்து வரத் தொடங்கியது. இதையடுத்து அணை கண்காணிப்பு அதிகாரிகள் சுற்றுப்புற கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படிநேற்று முன்தினம் இரவு 11:30 மணி அளவில் அபாய சங்கு ஒலி எழுப்பினர். நேற்று அதிகாலை 3:30 மணி அளவில் அணையில் 9 கதவுகளையும் திறந்து நீர் வரக்கூடிய 36 ஆயிரத்து 203 கன அடி உபரி நீரை அணையிலிருந்து வெளியே திறந்து விட்டனர்.

அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாக சங்கராபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்பரித்துக் கொண்டு வெளியேறியது.

ஃபெஞ்சல் புயல்

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்று அதிகாலை முதல் மழை கொட்டித் தீர்த்தது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. தமிழ்நாட்டில் சென்னையை காட்டிலும் விழுப்புரத்திலும் மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 30ம் தேதி முதல் இன்று காலை வரை விழுப்புரம் மாவட்டத்தில் மயிலத்தில் அதிகபட்சமாக 49 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. பாண்டிச்சேரியில்  46.95 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் 17.9 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலையில் 17.65 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தமட்டில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 11.52 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 10.46 செ.மீட்டர் மழை  பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கத்தில் 9.25 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 8.7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தத்தளிக்கும் விழுப்புரம், கடலூர் மாவட்டம் 

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் மழை பெய்ததால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம்போல மழைநீர் ஓடியது. ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் 49 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. திண்டிவனத்தில் மழைநீர் வடியாமல் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

விழுப்புரம் மாவட்ட பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி அந்த மாநில பேருந்து நிலையமே மூழ்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி அதன் அண்டை மாவட்டமான கடலூர் மாவட்டத்திலும் மழை கொட்டித் தீர்த்துள்ளது.

நிவாரண முகாம்களில் மக்கள்:

கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களிலும்  மழை காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் இன்னும் விநியோகிக்கப்படவில்லை. இதனால், மின் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தண்ணீரில் தத்தளித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நீர்நிலைகளின் கரையோரம் தங்கியிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே மாற்றப்பட்டனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

பாண்டிச்சேரியிலும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் வீடுகளில் சிக்கியுள்ள மக்களை படகுகளில் மீட்பு பணியினர் மீட்டு வருகின்றனர்.  

Continues below advertisement
Sponsored Links by Taboola