ஃபெஞ்சல் புயலானது கரையை கடந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரையை கடந்த புயல்:
வங்க கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயலானது , காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான கால இடைவெளியில் கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும், கரையை கடந்து புதுச்சேரியில் சில மணி நேரம் நிலை கொண்டிருந்ததாகவும் , அதையடுத்து விழுப்புரம் நோக்கி நகர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. இதனால், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் அதிக கனமழை பெய்தது.
விழுப்புரத்தை கடந்த காற்றழுத்தம்:
இந்நிலையில் , தற்போது விழுப்புரத்திலிருந்து மேலும் வலுவிழந்து திருவண்ணாமலை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து கொண்டு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவிழந்து அரபிக் கடல் நோக்கி நகரக் கூடும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. அதிபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 50 செ.மீ வரையில் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விழுப்புரத்தில் படிப்படியாக மழை குறையக்கூடும் என வானிலை வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
கனமழை:
இந்த தருணத்தில் அடுத்த 8 முதல் 12 மணி நேரத்தில், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வட கடலோர மாவட்டங்களான சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்ய கூடும் என மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.