புதுச்சேரி: புதுச்சேரியில் ஃபெங்கால் புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்படுவதுடன், சுமார் 10 அடிக்கு மேல் அலைகள் அதீத சீற்றத்துடன் அலை எழுந்து வரும் நிலையில், பாதுகாப்பு பணிகள் குறித்து முதல்வர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்.

Continues below advertisement

ஃபெங்கால் புயல் ( Cyclone Fengal ):

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இலங்கை திரிகோணமலையிலிருந்து கிழக்கு தென்கிழக்கேயும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு,தென்கிழக்கேயும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த சில  மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

Continues below advertisement

கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் செல்ல போலீசார் தடை

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்கால் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றமாக காணப்படுவதுடன், கடல் அலைகள் சுமார் 10 அடிக்கு மேல் அலைகள் ஆக்ரோஷமாக எழுவதால் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று பெங்கல் புயலாக வலுவடைகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 470 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 580 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் கடலில் தரைக்காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 75 கிலோமீட்டர் வேகம் வரை வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகு மற்றும் உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.

புதுச்சேரியில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10 அடிக்கு மேல் கடல் அலை ஆக்ரோஷமாக எழுவதால், கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கும் வரும் சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரியின் நகரப்பகுதியில் உள்ள பிரதான சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனிடையே, கடல் சீற்றம் தொடர்பான பாதுகாப்பு பணிகளை காவல் கண்காணிப்பாளரிடம் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கேட்டறிந்தார். புதுச்சேரி சட்டமன்றம் அருகே அமைந்துள்ள கடற்கரை பகுதிக்கு நேரில் சென்ற முதல் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார்.

அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த  காவல் கண்காணிப்பாளர் முதல்வரிடம் சீறிப்பாயும் அலை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. ஆனால் இது மிகப்பெரிய டேஞ்சர் என  முதல்வர் ரங்கசாமியிடம் கூறினர். அதற்கு முதல்வர் ரங்கசாமி, பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பெங்களூரில் இருந்து தான் வருகின்றனர்.  சுற்றுலா பயணிகளை என்ஜாய் பண்ண விடுங்கள். ஆனால் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.