ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக் காலங்களில் சென்னை வெள்ளத்தில் மூழ்குவது தொடர் கதையாக இருந்து வருகிறது. ஃபெஞ்சல் புயலால் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், ஆங்காங்கே வெள்ளம் குளம்போலத் தேங்கி வருகிறது.  குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் வெள்ளம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு செல்கின்றது.


தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிப்பு


வேளச்சேரி சாலைகளில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், வெள்ள நீரில் பாதிப்படைவதும் ஆண்டாண்டு காலம் நடைபெற்று வருகிறது. இது போன்ற மழை நேரங்களில் தங்களது கார்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, உயரமான பகுதிகளில் பார்க்கிங் செய்வது வழக்கமாக உள்ளது. 


அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் அதிக அளவு மழை பெய்தால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தால் மீண்டும் பாதிப்படையும் என்பதால், பாலங்களில் கார்களை குடியிருப்பு வாசிகள் பார்க்கிங் செய்தனர்.


போக்குவரத்து நெரிசல்


அந்த வகையில் வேளச்சேரி, ரயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது ஏராளமான கார்கள் வரிசைகட்டி நின்றன. இதனால் வேளச்சேரி பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்ததாக வீடியோ வெளியானது. எனினும் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்தது.


இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால், மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வேளச்சேரி மக்கள் மீண்டும் மேம்பாலத்தில் கார்களை நிறுத்தித் தொடங்கியுள்ளனர்.


இரு மருங்கிலும் வரிசைகட்டி நிற்கும் கார்கள் 


பாலத்தின் இரு பகுதிகளிலும் கார்களை நிறுத்தி உள்ளதால், காரை ஓட்டுவதற்கே சிரமமாக உள்ளதாக பிற வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேம்பாலத்தின் இரு மருங்கிலும் கார்கள் வரிசைகட்டி நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.