நீண்ட நாள்களுக்குப் பிறகு நண்பர்களைச் சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. அதனை மையப்படுத்தி சமீபத்தில் வெளியான `96’, `முதல் நீ முடிவும் நீ’ முதலான திரைப்படங்களும் தொட்டுச் சென்றன. பள்ளி, கல்லூரி மட்டுமல்லாமல் பயிற்சி நிலையங்கள், அலுவலகம் முதலான இடங்களில் கிடைக்கும் நண்பர்களையும் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் போது அது அழகான தருணங்களைத் தரும். இந்நிலையில் கோவையில் காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் நண்பர்களைச் சந்தித்து, ஆனந்தக் கண்ணீரில் நினைவலைகளைப் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர்.


கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த 1997ஆம் ஆண்டு மகளிர் காவல்துறைப் பிரிவில் 130 பேர் காவலர் பயிற்சி பெற்றனர். இந்த 130 பேரும் தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு மற்றும் மகளிர் காவல் ஆய்வாளர்களாகவும், துணை ஆய்வாளர்களாகவும், சிறப்பு துணை ஆய்வாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். 



இந்நிலையில், சமீபத்தில் மாமல்லபுரத்தில் உள்ள விடுதி ஒன்றில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 130 பெண் காவலர்களும் குடும்பம், குடும்பமாக ஒன்று கூடி சந்தித்துள்ளனர். அங்கு தாங்கள் 1997ஆம் ஆண்டு கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் பெற்ற அனுபவங்களையும், அங்கு நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளையும் தங்கள் நினைவலைகளொடு அசைபோட்டு, ஒவ்வொருவரும் நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டனர். 


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாகத் தமிழ்நாடு காவல்துறையின் ஓய்வுபெற்ற இயக்குனர் திலகவதி ஐபிஎஸ், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மாசானமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். இருவர் தங்கள் உரையின் போது, தற்போது பணியில் இருக்கும் 130 மகளிர் காவல்துறை அதிகாரிகளுக்கும் காவல்துறை மீது அர்ப்பணிப்போடு பணியாற்றுவது குறித்து அறிவுரைகள் வழங்கியது, ஆலோசனைகளை அளித்தது முதலானவற்றில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் இருவரும் காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்கள் பெற்ற அனுபவங்களைக் கேட்டறிந்தனர். தாங்கள் தொடர்புடைய நிகழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டி மகிழ்ந்தனர். 



இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 30 மகளிர் காவல்துறை ஆய்வாளர்கள், 25 மகளிர் காவல்துறை துணை ஆய்வாளர்கள், சிறப்பு துணை ஆய்வாளர்கள், முதல்நிலை காவலர்கள் என மொத்தமாக 130 மகளிர் காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் ஓய்வுபெற்ற இயக்குனர் திலகவதி ஐபிஎஸ் நினைவுப் பரிசுகளை வழங்கினார். 


மேலும் இந்த நிகழ்ச்சியில் மகளிர் காவல்துறை அதிகாரிகளின் குழந்தைகளின் பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து விழாவின் முடிவில் மகளிர் காவலர்கள் சிலர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் ஒன்று கூடி சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.