தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) உடல்நலக்குறைவால் காலமானார். இந்தியாவின் முதல் பெண் நீதிபதியாக பணியாற்றியவர் பாத்திமா பீவி. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண்மணி என்ற பெருமை இவருக்கே சேரும். 


கேரளா மாநிலம் பத்தினம்திட்டாவில் ராவுத்தர் குடும்பத்தில் 1927 ஆம் ஆண்டு மீரா சாகிப் - கதீஜா பீவிக்கு மகளாய் பிறந்தார். சட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்றார், உச்சநீதிமன்றத்தில் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். 


தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் பணி புரிந்தார். 1997 ஆம் ஆண்டு முதல் 2001  ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆளுநராகப் பணியாற்றினார்.  அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளின்படி பாத்திமா பீவி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஆட்சி காலத்தின் முடிவில் முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கும் ஆளுநராக இருந்த பாத்திமா பீவிக்கும் மோதல் போக்கு நிலவியது. சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ்துறையை உருவாக்க எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் எம்.எல்.ஏவாக இல்லாத ஜெயலலிதாவுக்கு பதவு பிரமாணம் செய்து வைத்தது, கலைஞர் கருணாநிதியின் நள்ளிரவு கைது நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் ஆளுநராக இருந்த பாத்திமா பீவி.


இதனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டார். மேலும் ஆளுநர் தனது கடமையில் இருந்து தவறியதாக கூறி மத்திய அரசால் ஆளுநர் பதவியில் இருந்து பாத்திமா பீவி நீக்கப்பட்டார். பின் ஆந்திரா ஆளுநர் ரங்கராஜன் தற்காலிக ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.


பின்னர் அவர் கேரளாவிற்கு சென்றார். அங்கு வயது மூப்பின் காரணமாக கொல்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.