விவசாயம் : விவசாயிகள் தற்பொழுது வடகிழக்கு பருவமழையில் தோட்டக்கலைப் பயிர்களைக் காக்கும் அரிய டிப்ஸ் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை சார்ந்த அதிகாரிகளின் விழிப்புணர்வு.
பருவ மழை என்பது தோட்டக்கலை பயிர்களை காக்கும் முறை
வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், பருவமழை காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களைப் பாதுகாப்பதற்கான அத்தியாவசிய விழிப்புணர்வு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. விவசாயிகள் இந்தப் பராமரிப்பு முறைகளைக் கையாண்டு, அதிக சேதத்தைத் தவிர்த்து, சிறந்த லாபம் ஈட்டலாம்.
பருவமழை காலத்தில் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய பயிர் பாதுகாப்பு வழிமுறைகள்:
மா, கொய்யா, சப்போட்டா போன்ற பல்லாண்டு பயிர்கள் பலத்த காற்று மற்றும் அதிக நீரால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டியவை:
கிளைகளை நீக்குதல்:
மரத்தில் நல்ல காற்றோட்டம் செல்லவும், மரத்தின் எடையைக் குறைக்கவும், காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை உடனடியாக நீக்க வேண்டும் (கவாத்து செய்தல்).
வடிகால் வசதி:
தோட்டத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க, உரிய வடிகால் வாய்க்கால்களை அமைத்து நீரை வெளியேற்ற வேண்டும்.
மண் அணைத்தல்:
மரத்தின் அடிப்பகுதியில் மண்ணை அணைத்து, தண்டுப் பகுதியில் குவித்து வைப்பதன் மூலம் வேர்ப் பகுதிகளை வலுப்படுத்தலாம், இதனால் மரங்கள் சாய்வது தடுக்கப்படும்.
நோய் தடுப்பு:
ஈரப்பதத்தால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த, உரிய நேரத்தில் தடுப்பு மருந்துகளைப் (பூஞ்சாணக் கொல்லிகளை) பயன்படுத்த வேண்டும்.
தாங்கு குச்சிகள்:
இளம் செடிகள் புயல் காற்றினால் பாதிக்காமல் இருக்க, வலுவான தாங்கு குச்சிகளால் கட்டி பாதுகாக்க வேண்டும்.
தென்னை மரங்களுக்கான பாதுகாப்பு
அறுவடை:
உரிய நேரத்தில் தேங்காய் மற்றும் இளநீரை அறுவடை செய்து விடுவதன் மூலம், புயல் மற்றும் காற்றினால் ஏற்படும் சேதங்களை வெகுவாகத் தவிர்க்கலாம்.
ஓலைகளை நீக்குதல்:
மரத்தின் அடிச்சுற்றில் உள்ள பழைய மட்டைகளையும், காய்ந்த ஓலைகளையும் வெட்டி அகற்றுவதன் மூலம் மரத்தின் எடையைக் குறைத்து, காற்று மற்றும் புயலினால் மரம் சாயாமல் தடுக்கலாம்.
நீர் மற்றும் உரம்:
தற்காலிகமாக நீர் மற்றும் உரமிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால், மழைக்காலத்தில் ஏற்படும் வேர் அழுகல் நோய் மற்றும் ஊட்டச்சத்து இழப்பைத் தடுக்கலாம்.
நீர் மேலாண்மை:
மழைநீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்துவது மற்றும் மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்தல் (Mounding) மூலம் நீர் தேக்கத்தை தடுத்து வேர் அழுகல் நோயைத் தவிர்க்கலாம்.
சுண்ணாம்பு பூசுதல்:
தண்டுப் பகுதியில் பூஞ்சை, பாசி வளா்வதைத் தடுக்க சுண்ணாம்பு அடித்தல் அவசியம். காய்கறி பயிர்கள் அதிகப்படியான நீரினாலும், ஈரப்பதத்தாலும் காய்கறிப் பயிர்கள் அதிக சேதமடைய வாய்ப்புள்ளது.
வடிகால் மற்றும் ஊன்றுகோல்
அனைத்து வயல்களிலும் மழைநீர் தேங்காதவாறு போதிய வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். மேட்டுப்பாத்தியில் சாகுபடி செய்வது சேதத்தைக் குறைக்க உதவும்.
தக்காளி போன்ற செடிகளுக்கு, காற்று மற்றும் கனமழையால் சாயாமல் இருக்க, வலுவான ஊன்றுகோல் அமைத்துப் பாதுகாக்க வேண்டும்.
நோய் தடுப்பு:
ட்ரைக்கோடெர்மா விரிடி (Trichoderma viride): இந்த உயிரியல் பூஞ்சாணக் கொல்லியை வேர் பகுதியில் இடுவது, வேர் அழுகல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும்.
சூடோமோனாஸ் (Pseudomonas): இந்த உயிரியல் பூஞ்சாணக் கொல்லியை இலைகளில் தெளிப்பது, இலைகளில் ஏற்படும் பூஞ்சைத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த உதவும்.
தடுப்பு மருந்துகள்:
நோய் பரவுதலைக் கட்டுப்படுத்த, உரிய நேரத்தில் இரசாயனத் தடுப்பு மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.
வாழை:
அதிக காற்றடித்தால் சாய்ந்து விடக்கூடிய வாழை மரங்களுக்கு, சவுக்கு அல்லது தைல மரக் கொம்புகளை ஊன்றுகோலாக நட்டு முட்டுக்கொடுக்க வேண்டும். 75% முதிர்ந்த வாழைத்தார்களை உடனே அறுவடை செய்தல் வேண்டும்.
நிழல் வலை/பசுமைக்குடில்:
பசுமைக்குடில் மற்றும் நிழல் வலைக்கூடங்களின் அடிப்பாகத்தை நிலத்துடன் கம்பிகளால் பலமாக இணைத்து, காற்றினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
அறுவடைக்குத் தயாரான அனைத்துப் பயிர்களையும் மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே அறுவடை செய்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
இந்த அரிய பாதுகாப்பு வழிமுறைகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் முறையாகப் பின்பற்றுவதன் மூலம், பருவமழையினால் ஏற்படும் பயிர் சேதங்களைக் குறைத்து, தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தெரிவித்துள்ளது.