நேற்றைய தினம் விவசாயிகள் 'டெல்லி சலோ' பேரணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர். போராட்டங்களை முன்னின்று நடத்திய சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா அடுத்த வாரம் வரை பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு மற்றும் கானௌரி ஆகிய இரு இடங்களில் போராட்டத்தை தொடரும் படி கேட்டுக் கொண்டுள்ளர்.



வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் பதட்டமான சூழல் காணப்படுகிறது.


விவசாயிகள் திட்டம் என்ன?


இன்று மெழுகுவர்த்தி ஊர்வலமும், நாளை விவசாயிகள் தொடர்பான கருத்தரங்குகளும் நடைபெற உள்ளன. பிப்ரவரி 26 அன்று, போராட்டக்காரர்கள் உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் அமைச்சர்களின் உருவ பொம்மைகளை எரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா மன்றங்களின் பல கூட்டங்கள் அடுத்தடுத்த இரண்டு நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தின் மையக் கருத்தாக முன்வைக்கப்பட்டு வருகிறது.  


புதன்கிழமை கானௌரியில் நடந்த மோதலின் போது விவசாயி ஒருவர் உயிரிழந்தார். மேலும், போலீசார் பலரும் காயமடைந்தனர், இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைத்தனர். பதிண்டாவைச் சேர்ந்த 21 வயதான சுப்கரன் சிங் இந்த மோதலில் உயிரிழந்தார். சுப்கரன் சிங்கின் உயிரிழப்பு தொடர்பாக  எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் பஞ்சாப் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். அதுவரை அவரது உடல் தகனம் செய்யப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.


முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய காவல் துறையினர் மறுக்கும் நிலையில், உயிரிழந்த சிங்கிற்கு தியாகி பட்டம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில் உயிரிழந்த சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி வரை டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.