குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பானது, இந்த ஆண்டு ‘இந்தியா 75' என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது.
இந்திய குடியரசு தின அலங்கார அணிவகுப்பில், தமிழகத்தின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகளை மத்திய அரசின் தேர்வுக் குழு நிராகரித்துள்ளது. இதற்கு தமிழக அரசும், பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், "இந்நிகழ்வில் இடம்பெற வேண்டி விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில், அலங்கார ஊர்திக்காண வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வுக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சர்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
போட்டோஷாப் படம்:
இந்தச் சூழலில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதாக ஒரு செய்தி பரவியது.
அந்தச் செய்தியில், "குடியரசு தின அலங்கார ஊர்தியில் தமிழக அரசு சார்பாக அனுப்பப்பட்ட வாகனத்தில் கருணாநிதி மற்றும் அவரின் இணைவியார் ராசத்தியம்மாள் சிலை வைக்கப்பட்டதால் தமிழக அலக்கார வாகனம் நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வந்துள்ளது. இதனை திமுக அரசு தவிர்த்திருக்கலாம் காங்கிரஸ்" என கார்த்தி சிதம்பரம் தமிழக அரசுக்கு அறிவுரை கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், நெட்டிசன்கள் சிலர் பகிர்ந்த புகைப்படத்தில், இதற்காகத் தான் தமிழக வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது நன்றி பிரதமரே என்று குறிப்பிட்ட போட்டோஷாப் செய்யப்பட்ட வாகனமும் இடம்பெற்றிருந்தது.
கார்த்தி சிதம்பரம் மறுப்பு:
அந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கார்த்தி சிதம்பரம் தவறான செய்திகளைப் பரப்புவதை நிறுத்தவும் எனக் கூறி அதில் தமிழக பாஜகவையும் டேக் செய்துள்ளார்.
இதனையடுத்து இணையத்தில் பாரதியாரின் பின்னால் மஞ்சள் நிற சட்டையுடன் கருணாநிதியும் அருகில் அவரது துணைவியார் ராசாத்தி அம்மாளும் இருப்பது போன்ற புகைப்படம் போலியானது எனத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சில நெட்டிசன்கள், இதைக்கூட போட்டோஷாப் செய்வதால் தான் பாஜகவை தமிழக மக்கள் நிராகரிக்கின்றனர் எனப் பதிவு செய்து உண்மையான தமிழ்நாடு அலங்கார ஊர்தியின் புகைப்படத்தையும் வெளியிட்டனர்.