நாடு முழுவதும் இன்று 73வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. அதேபோல், தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை கோட்டையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். ஆளுநர் கோடியை ஏற்றும்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது. முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்று கொண்டார். 


கொடி ஏற்றத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் குடியரசு தின விழா அணிவகுப்பில் டெல்லி குடியரசு தின விழாவில் புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் இடம்பெற்றுள்ளன. அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார்,வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், வீரர் அழகு முத்துகோன் சிலைகள் இடம் பெற்றிருந்தன. அதேபோல்,பெரியார், ராஜாஜி,காமராஜர்,பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகளும் இருந்தன. அலங்கார ஊர்தியில் 75 எனக் குறிப்பிட்டு தேசியக் கொடியும், அதன் கீழ் 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இதனைக் குறிப்பிட்ட இணையவாசிகள் சிலர் 73வது குடியரசு தினம் கொண்டாடும் போது 75 என தவறாக தமிழக அரசு பொறித்துள்ளதாக குறிப்பிட்டனர். இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் விவாதத்தையே கிளப்பியது. 




அது என்ன 75?


75 எனக் குறிப்பிட்டு தேசியக் கொடி குறிப்பிடப்பட்ட அடையாளம் என்பது குடியரசுத் தினத்தை குறிப்பது அல்ல. அது  75வது ஆண்டு சுதந்திர ஆண்டை குறிக்கும் அடையாளம் ஆகும். 


75வது ஆண்டு சுதந்திர ஆண்டு:


இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை, அம்ருத் மகோத்சவம் என்ற கொண்டாட்டமாக இந்தியா கொண்டாடி வருகிறது. இது தொடர்பான முதல் கூட்டம் கடந்த ஆண்டு  மார்ச் மாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, 75வது ஆண்டு சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்,  130 கோடி இந்தியர்களின் பங்களிப்புடன்  இருக்க வேண்டும். மக்களின் பங்களிப்புதான் இந்த விழாவில் முக்கியம்.  இந்த பங்கேற்பில் நாட்டு மக்கள் 130 கோடி  பேரின் உணர்வுகள், ஆலோசனைகள்  மற்றும் கனவுகள் அடங்கியுள்ளன எனக் குறிப்பிட்டார். 




அதன்படி நாட்டின் எந்தவித முக்கிய நிகழ்ச்சிகளிலும் 75வது ஆண்டு சுதந்திர ஆண்டும் குறிப்பிடப்பட்டு அடையாளப்படுத்தப்படுகிறது. பல்வேறு மாநிலங்கள் மெட்ரோ, ரயில்கள் என சிறப்பு போக்குவரத்தை  75வது ஆண்டு சுதந்திர ஆண்டுக்காக இயக்கியும் வருகின்றன.






உண்மை என்ன?




73 வது குடியரசுத் தினத்துக்கும், 75 என குறிப்பிடப்பட்ட தேசியக் கொடி அடையாளத்துக்கும் தொடர்பில்லை. அது  75வது ஆண்டு சுதந்திர ஆண்டை கொண்டாடும் அடையாளம் மட்டுமே.