ஒரே வீட்டில் இரண்டு மின் இணைப்பு இருந்தால், அதனை ரத்து செய்யச் சொல்லி மின்வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்துள்ள வீடுகளை ஆய்வு செய்து, உடனடியாக நோட்டீஸ் வழங்கச் சொல்லியும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கேட்டுக்கொண்டுள்ளது.


வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மால்கள் உள்ளிட்டவற்றுக்கான மின்சார கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்திற்கு சமீபத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்த நிலையில், மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரத்தை முறைப்படுத்தும் விதமாக புதிய உத்தரவை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்புக்கு மேல் மின் இணைப்பு வைத்திருந்தால், ஒரு இணைப்புக்கு மட்டும்தான் அரசின் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானியம் வழங்கப்பட வேண்டும் என்று மின்சார வாரியத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மற்ற இணைப்புகளுக்கு இந்த சலுகை ரத்து செய்யப்படுவதுடன் அந்த மின் இணைப்புக்கான கட்டணமும் பொது பயன்பாட்டுக்கான கட்டணமாக மாற்றப்படவேண்டும் என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து ஆய்வு செய்து, ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்துள்ள வீடுகளை கண்டறிந்து உடனடியாக நோட்டீஸ் வழங்கி, அதற்கான விளக்கத்தை பெற்று மின் இணைப்புகளை முறைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மானியத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு குடும்பமும் ஒரு அடுக்குமாடி சேவை இணைப்பை மட்டுமே பெற வேண்டும் என்று உத்தரவு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கூடுதல் இணைப்புகளை இரண்டு வாரங்களுக்குள் ஒரு இணைப்பாக இணைக்க மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது.


ஆனால், இது தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ள வீடுகளுக்கு அதற்கான ஒப்பந்த ஆவணங்களை வாங்க வேண்டும ? கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள் தனித்தனி குடும்ப அட்டை வைத்திருந்தால் அந்தக் குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் இருந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன ? வடகிழக்குப் பருவ மழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள், பண்டிகை காலம் ஆகியவற்றால் 2 வாரத்துக்குள் வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்க போதியநேரம் இல்லாததால், நோட்டீஸ் வழங்க காலஅவகாசம் வழங்கவேண்டும் எனவும் மின்வாரிய தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதோடு, வீட்டு இணைப்புகளை ஒழுங்குப்படுத்துவதற்கு ஒவ்வொரு வீடு, குடியிருப்பு, அடுக்ககங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய கொடுக்கப்பட்டுள்ள கால அளவானது சவாலாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.




இந்த கேள்விகளையும் கோரிக்கைகளையும் பரிசீலித்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கி, மின் இணைப்புகளை முறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை மின்சார வாரியத்திற்கு 2023ஆம் ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஏற்கனவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், வீட்டை வாடகை விட்டு, சப் மீட்டர், செப்பரேட் மீட்டர் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் இந்த அறிவிப்பால் கலக்கம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் என்பது வீட்டில் உள்ள ஒரு மிண் இணைப்பு நம்பருக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும், கூடுதல் இணைப்புகள் இருந்தால் அதனை மின்வாரியத்தின் வேறு திட்டம் மூலம் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.