இந்த வெற்றி நமது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 


ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை தொடர்ந்து  இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் இம்முறையும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிட்டது. 


இந்தநிலையில், காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரும்பான்மையாக முன்னிலை வகித்து வருகிறார். கிட்டதட்ட வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் ஏபிபி நாடுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தொடர்ந்து முன்னிலை மட்டுமல்ல, கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இது ஒரு மாதத்திற்கு முன்பே தெரியும். இந்த வெற்றி நமது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. 20 மாத ஆட்சி காலத்தில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு இந்த வெற்றி ஊக்கத்தை தரும். ஈரோடு மக்களுக்கு செய்ய வேண்டியதை அமைச்சர் முத்துசாமி உடன் இணைந்து செய்வேன்” எனத் தெரிவித்தார்.