Continues below advertisement

சென்னையில் மெட்ரோ ரயில் பணி

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிக்கி திணறி வரும் நிலையில், ஒரு இடத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு செல்லவே பல மணிநேரம் ஆகும் நிலை உள்ளது. இந்த நிலையில் தான் மெட்ரோ ரயில் திட்டம் மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து சென்னை விமான நிலையத்தில் அரை மணி நேரத்திலேயே சென்று சேர முடிகிறது. இதனையடுத்து சென்னையில் பல் இடங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்யும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் மக்கள் தொகை அதிகம் உள்ள வழித்தடமாக உள்ள அயனாவரம்- பெரம்பூர் இடையிலான மெட்ரோ ரயில் சுரங்கம் தொண்டும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

அயனாவரம் டூ பெரம்பூர்

இது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரயில் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் மேலகிரி அயனாவரம் நிலையத்திலிருந்து பெரம்பூர் நிலையம் வரையிலான (down line) 861 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை அமைக்கும் பணியை முடித்து பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளது. இது Tata Projects நிறுவனத்தின் TU02 ஒப்பந்தப் பிரிவில் 8வது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வெற்றிகரமான பணி நிறைவு ஆகும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தனது இரண்டாம் கட்டத் திட்டத்தில் இதுவரை மொத்தம் 19 சுரங்கம் தோண்டும் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

Continues below advertisement

ரயில் நிலையத்திற்கு கீழ் மெட்ரோ ரயில்

சுரங்கம் தோண்டும் இயந்திரம் மேலகிரி, பெரம்பூர் இரயில் நிலைய தண்டவாளங்கள் மற்றும் நடைமேடைகளுக்கு அடியில், அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் நெருக்கமான கட்டிடங்கள் நிறைந்த பகுதிகளுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்தது. சுரங்கப்பாதை அமையும் வழியில் இருந்த 32-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் (Bore wells) முறையாகக் கையாளப்பட்டன. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், அக்கிணறுகளுக்குப் பதிலாக மாற்று நீர் ஆதாரங்கள் மெட்ரோ நிர்வாகத்தால் வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.