அம்மா இருந்தால் இதெல்லாம் நடக்குமா? - கட்சியை விட்டு நீக்கிய இபிஎஸ்.. கதறி அழுத பெஞ்சமின்!
கட்சியில் பிரச்னை நடந்து வரும் நிலையில் நான் யார் பக்கமும் இல்லை. அதிமுகவின் கட்சிக்கொடி, சின்னம் யாரிடம் இருக்கிறதோ அங்கு தான் இருப்பேன் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெஞ்சமின் கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் நான் தோற்ற நிலையில் எந்தவித காரணமும் இல்லாமல் கட்சியை விட்டு நீக்கி விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வேதனை தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மதுரவாயல் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அந்த தொகுதியில் தவெக வேட்பாளர் ரேவந்த் சரண் வெற்றி பெற்றார். அதேசமயம் பெஞ்சமின் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் கட்சியில் பிளவு ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி.வேலுமணி என இருதரப்பாக பிரிந்துள்ளது. இதில் எஸ்.பி.வேலுமணி தரப்பை சார்ந்த பலரையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதில் பெஞ்சமின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
ஆனால் தான் எந்த தப்பும் செய்யவில்லை என பெஞ்சமின் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் தன் ஆதரவாளர்களுடன் தியானம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சட்டமன்ற தேர்தலில் நான் தோற்று விட்டேன். அந்த வேதனையில் இருந்து மீளவில்லை. அப்படியான என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். இந்த இயக்கத்துக்கு நான் துரோகம் செய்தேன்? .. என்ன தவறு செய்தேன்? என்பது எனக்கு தெரியவில்லை. கட்சி பதவியில் இருந்து என்னை நீக்கி விட்டார்கள்.
கட்சியில் பிரச்னை நடந்து வரும் நிலையில் நான் யார் பக்கமும் இல்லை. அதிமுகவின் கட்சிக்கொடி, சின்னம் யாரிடம் இருக்கிறதோ பெஞ்சமின் அங்கு தான் இருப்பேன். இதுநாள் வரை ஜெயலலிதா தொடங்கி யார் தலைமை வகிக்கும்போது சோதனை வந்தாலும் அதிமுகவுக்கு தான் விசுவாசமாக இருந்தேன். என்னை பதவி நீக்கம் செய்தது உண்மைக்கு கிடைத்த பரிசாக பார்க்கிறேன்.
மக்கள் பாராட்டக்கூடிய வகையில் துணை மேயர், அமைச்சராக பணியாற்றியிருக்கிறேன். ஜெயலலிதா இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா?.. என் குடும்பத்தை விட கட்சியை தான் அதிகமாக நேசித்தேன். பதவி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கட்சி அலுவலகத்திற்கு போன் செய்து கேட்டேன். எங்களுக்கு தெரியாது என சொல்லி விட்டார்கள்.
வாக்கு எண்ணிக்கைக்கு முன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆசி பெற்றேன். வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தோற்றும் கூட நேரடியாக பேசினேன். எனக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார். இன்றைக்கு அதிமுகவில் நடக்கும் பிரச்னை சட்டமன்ற உறுப்பினர்களுக்கானது. இதில் மாவட்டச் செயலாளராகிய நான் எப்படி இடம் பெறுவேன்?..
நான் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருப்பதாக சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். எனக்கு என்ன நடந்ததே தெரியவில்லை. நான் தேர்தலில் தோற்றதும் என் குடும்பத்தினர் என்னை தேற்றுவதற்காக வெளியூர் அழைத்து சென்றார்கள். வந்து பார்ப்பதற்குள் இப்படி நடந்து விட்டது.
தலைமை என்ன சொல்லியதோ அதை ஒன்று விடாமல் செய்திருக்கிறேன். திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்ல சென்னையிலும் கட்சி சார்பாக நடக்கும் நிகழ்ச்சியிலும் என் பங்கு இருக்கும். என் தாய் ஜெயலலிதா நினைவிடம் வந்து அவரிடம் முறையிட்டுள்ளேன். நான் மட்டுமா தேர்தலில் தோல்வியடைந்தேன். தோற்றால் பதவியை பறித்து விடுவார்களா சொல்லுங்கள். 1988ம் ஆண்டு கட்சியில் சேர்ந்து உண்மையாக இருந்து உழைத்து வருகிறேன். ஓரிரு நாட்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதைப் பாருங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















